சசிகலா, 100 விழுக்காடு அதிமுகவில் இணைக்கப்படமாட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள காந்தியடிகளின் சிலையின் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் , தலைமைச் செயலாளர் சண்முகம், அமைச்சர்கள் ஜெயக்குமார் எஸ் பி வேலுமணி , கே.பி. அன்பழகன் , ராஜேந்திர பாலாஜி , கே.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மரியாதை செலுத்திய பின்னர் சர்வோதயா சங்கம் சார்பில் இசைக்கப்பட்ட மகாத்மா காந்தியடிகளுக்கு பிடித்தமான பாடல்களை ஆளுநர் , முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து சிறுது நேரம் கேட்டு ரசித்தனர் . பின்னர், கை ராட்டையால் நெய்யப்பட்ட நூல் கட்டு மற்றும் கதர் துண்டு மூவருக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் ,7 பேர் விடுதலை தொடர்பாக அதிமுக சார்பில் ஆளுநருக்கு மனு அனுப்பியது மட்டுமின்றி , முதலமைச்சர் ஆளுநரை நேரில் சந்திக்கும்போதெல்லாம் வலியுறுத்தியும் வந்திருக்கிறார். 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம்.அதிமுக எஃகு கோட்டை , மீண்டும் ஜெயலலிதா ஆட்சி் தொடர வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர். முதலமைச்சர் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். சசிகலா 100 விழுக்காடு அதிமுகவில் இணைக்கப்படமாட்டார் எனவும் அவர் பேசினார்.







