மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் நாளை (ஞாயிறு) முருக பக்தர்கள் மாநாடு இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஆன்மிக மாநாட்டில் அரசியல் கலக்கும் நோக்கத்தில் செயல்படக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
மேலும் மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் காப்பீடு, ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று ஆகியவற்றை காவல்துறையினரிடம் வழங்கி, அவர்கள் பதிவு செய்த பிறகு உள்ளே அனுமதிக்கலாம் என்றும் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் உத்தரப்பிரதச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாளை மதுரையில் நடைபெற இருக்கும் முருகன் பக்தர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வேகமாக பரவியது. இந்த நிலையில் முருகன் பக்தர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக வெளியான செய்திகள் உண்மை அல்ல என ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 22ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற இருக்கும் முருகன் பக்தர்கள் மாநாட்டில் தலைவர் @rajinikanth அவர்கள் கலந்து கொள்கிறார் என்று உலாவரும் செய்தி பொய்யானது . தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொள்ள போவதில்லை .#ThalaivarNirandharam #SuperstarRajinikanth
— RIAZ K AHMED (@RIAZtheboss) June 20, 2025
இது குறித்து சினிமா பிஆர்ஓ ரியாஸ் அகமது வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில், “வரும் ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் முருகன் பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் என்று உலாவரும் செய்தி பொய்யானது. தலைவர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள போவதில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.







