மாரடைப்பால் மரணமடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பயோபிக் திரைப்படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் புனித் ராஜ்குமார் (46). இவர் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளையமகன்.
அவர் மறைவுக்கு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் உட்பட பலர் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அவர் உடல், கன்டீரவா மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் பயோபிக் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புனித் ராஜ்குமார் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ராஜகுமாரா, யுவரத்னா ஆகிய படங்களை இயக்கியவர் சந்தோஷ் ஆனந்த் ராம். இவர், புனித்தின் பயோபிக்கை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் சந்தோஷ் ஆனந்த் ராமிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த அவர், ’இந்த யோசனையை திரையில் கொண்டுவர என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து புனித் ராஜ்குமாரின் பயோபிக் உருவாகலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.









