உலகக்கோப்பை தொடருக்குள் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும், அணிக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் என கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டி தொடரில் குஜராத் அணி பீல்டிங்கின் போது சிஎஸ்கே அணி வீரர் ருதுராஜ் அடித்த பந்தினை பவுண்டரி லைனில் தடுக்க பாய்ந்து குதித்தபோது கேன் வில்லியம்சன் கால்கள் மடங்கி கீழே விழுந்தார். அந்த முயற்சியில் சிக்ஸரை நோக்கி சென்ற பந்தை பவுண்டரியாக மாற்றினார். ஆனால் கீழே விழுந்த வில்லியம்சன் எழ முடியவில்லை என்ற காரணத்தால் பின்னர் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்.
அதனை தொடர்ந்து காயத்தினால் வில்லியம்சன் ஐபிஎல் தொடரிலிருந்துதே வெளியேறினார். இதுமட்டுமில்லாமல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் விளையாட முடியாது என மருத்துவர்கள் முன்பு தெரிவித்திருந்தார்கள். அறுவை சிகிச்சை மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ளது. தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வரும் கென் வில்லியம்சன், அவ்வப்போது மெதுவாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.
சமீபத்தில் வில்லியம்சன் ஒரு நேர்காணலின் போது கூறியதாவது:
”எனது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது மிகவும் சிறிய சிறிய காலடியாக எடுத்து வைக்கிறேன். ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவேனா என்பது தெரியவில்லை. அதைப் பற்றி அதிகமாக சிந்திக்கவில்லை. அணியில் நிலைப்பாடு என்னவென்றும் தெரியவில்லை. எனக்கு ஏற்பட்ட காயத்தை போலவே காயமடைந்த வீரர்களிடமும் பேசினேன். அவர்களின் அனுபவத்தை பெற்றுக்கொண்டேன். சில நேரங்களில் கடினமாகவும் இருக்கிறது.
எப்போது முழுமையாக குணமடையும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. உலகக்கோப்பை தொடருக்கு போதிய நாட்கள் இருப்பதாக நினைக்கிறேன். அதற்குள் குணமடைந்து, வலைப்பயிற்சியில் ஈடுபடுவேன். மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பவேன் என நினைக்கிறேன். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.







