மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும் எனும் ரகசியத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுவாரா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் மேலூரில் மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் 1,500 மூத்த திமுக உறுப்பினர்களுக்கு அமைச்சர் உதயநிதி பொற்கிழியை வழங்கினார். இந்த விழாவில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
மதுரை மக்கள் அன்புக்கும், வீரத்துக்கும் பெயர் போனவர்கள். மதுரையில் தான் திமுகவின் இளைஞரணி தொடங்கப்பட்டது. திமுக மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்க விதை விதித்தவர் அமைச்சர் மூர்த்தி. மதுரையில் உயர்நீதிமன்றம், சர்வதேச விமான நிலையம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிகட்டு மைதானம் ஆகியவற்றை கொண்டு வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தாழ்த்தப்பட்ட சமுதாயம், விதவை என்பதால் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசு தலைவர் அழைக்கப்படவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவினர் கடுமையான உழைக்க வேண்டும். பிரதமர் மோடி எங்கே சென்றாலும் என்னை பற்றியும் முதலமைச்சர் குறித்தும் பேசி வருகிறார். மோடி ஒன்பதரை ஆண்டுகளில் என்ன செய்தார் என தெரியவில்லை.
பாஜக அரசால் வாழும் ஒரே குடும்பம் அதானி குடும்பம் மட்டுமே. அதானிக்காக பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒரு மாநாடு எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு அதிமுக மாநாடு உதாரணம். ஒரு மாநாடு எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு திமுக இளைஞரணி மாநாடு முன்னுதாரணமாக அமைய உள்ளது.
நீட் தேர்வு ரத்து குறித்த ரகசியத்தை என்னிடம் கேளுங்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி வருகிறார். எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும் எனும் ரகசியத்தை அவர் கூறுவாரா?. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 1 கோடி கையெழுத்து பெறும் நிகழ்ச்சியை ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. திமுகவின் கையெழுத்து இயக்கத்தில் அதிமுகவோ அல்லது ஆர்.பி.உதயகுமாரோ பங்கேற்க முடியுமா?
அதிமுக – பாஜக கட்சிகள் கூட்டணி குறித்து மாறி மாறி பேசி கொள்வது அவர்களுடைய உள்கட்சி பிரச்னை. சனாதனம் குறித்து பேசிய கருத்து திரித்து வெளியிட்டப்பட்டு உள்ளது. சனாதனத்தை ஒழிக்கும் வரை போராட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற திமுகவினர் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும், தமிழ்நாட்டில் இருந்து பாஜகவை ஒழிக்க வேண்டும் என்றால் அதிமுகவை ஒழிக்க வேண்டும்”
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







