ராஜஸ்தானில் மகன் கண் முன்னே கிரிக்கெட் மட்டையால் கணவரை மனைவி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆசிரியரான கணவர் அளித்த புகாரின் பேரில் கணவருக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜஸ்தானின் அல்வார் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் சிங் யாதவ் இவர் தனியார் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வரும் நிலையில் இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானா மாநிலம் சோனிபட்டில் வசிக்கும் சுமன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆரம்ப கட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் தற்போது குடும்ப பிரச்னை காரணமாக தினமும் கிரிக்கெட் மட்டையால் மனைவி சரமாரியாக கணவரைத் தாக்கி வருவதாகவும்
உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பு கோரி அஜித் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து ஆதரத்திற்காக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் வழங்கினர். அதில் மனைவி தாக்கும்போது பயந்து நிற்கும் மகனின் காட்சியும் பதிவாகி இருந்தன. இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில் அவருக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அஜித் கூறுகையில், “ஆசிரியர் பணியின் கண்ணியத்தை மனதில் கொண்டு வன்முறையை சகித்துக் கொண்டதாக கூறினார். ஆனால் இப்போது என் மனைவி கடுமையாக என்னை தாக்கிவிட்டார். நான் நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்துள்ளேன். நான் சுமன் மீது கையை உயர்த்தியதில்லை. சட்டத்தை கையில் எடுத்ததில்லை. நான் ஒரு ஆசிரியர். ஒரு பெண் மீது ஆசிரியர் கையை உயர்த்தி சட்டத்தை கையில் எடுத்தால் அது இந்திய கலாசாரத்திற்கும், அவரது நிலைப்பாட்டிற்கும் எதிரானது எனவும் தெரிவித்தார். மனைவியிடம் அவர் அடிவாங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.







