ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் தமிழ் திரைப்படம் தேர்வாகாதது ஏன் என்பது குறித்து தேர்வு குழு உறுப்பினர் பெப்சி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு இந்தியா சார்பில் திரைப்படத்தை அனுப்பவதற்கான தேர்வு குழுவின் உறுப்பினரும், நடிகருமான பெப்சி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ் திரைப்படங்களை பொறுத்தவரை மாமன்னன் படத்தில் எமோஷனல் அதிகம். ஆனால் நாங்கள் அங்கு பேசியதை வெளியே சொல்ல முடியாது. ஆஸ்கர்க்கு படத்தை தேர்வு செய்யும் குழுவில் எல்லா மாநிலங்களிலும் இருந்து ஜூரி மெம்பர்ஸ் இருப்பாங்க. எந்த படங்களில் எமோஷன்ஸ் அதிகமாக இருக்கிறது. இப்படியாக பல விஷயங்கள் பார்க்கப்படும். ஒரு படம் என்றால் ஹீரோ, வில்லன் என்று ஒரு தியரி இருக்கும். ஆனால் அதை பிரேக்கப் பண்ண விஷயத்தில் எல்லாரும் தேர்வு செய்த படம் தான் 2018 . இந்த படத்தில் வில்லன் என்றால் அது எமோஷனல் தான்.
குளோபலாக இந்தியா சார்பில் ஒரு படம் தேர்வாக வேண்டும் எனும் போது எந்த படம் வர வேண்டும் என்று தமிழனாக உணர்வு நிச்சயமாக நமக்கு இருக்கும். எனக்கும் இருந்தது. ஆனால் இது உலகம் முழுவதுக்குமான படம் என்று சொல்லும் போது அதை நாம் ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும். இங்கே சில படங்களை உணர முடிந்தது.
தமிழில் 4 படங்கள் தான் போட்டிக்கு வந்தன. ஹிந்தியில் நிறைய படங்கள் வந்தன. ஏன் போன முறை ’விசாரணை’ திரைப்படம் போனதில்லையா? நம்முடைய வெற்றிமாறன் தான். எல்லாருக்கும் அந்த படம் பிடித்தது அல்லவா. அப்படியல்ல கணக்கு. நாம் நிறைய படங்களை சொல்ல முடியும். ஆஸ்கர் தேர்வுக்கு அனுப்புவதற்கு முன் நிறைய செலவு செய்ய வேண்டி உள்ளது. எல்லா நாடுகளுக்கும் போய் வர வேண்டும். அங்கங்கே ஸ்டால் போட வேண்டும். அப்போது தான் ஆஸ்கர்க்கு போகும். அந்த ஆஸ்கர் பரிந்துரை மேடையை படங்கள் தொடுவதற்கே அவ்வளவு செலவாகும். இப்போது தான் இந்திய அரசு பேசி, நாம் தேர்ந்தெடுக்கும் படத்துக்கு ரூ.1 கோடி கொடுப்பதாக ஒத்து கொண்டு உள்ளது. இதில் பிரம்மாண்ட படங்களும் இருக்கிறன. ஹிந்தியில் அத்தனை படங்கள் வந்தாலும் எதாவது தேர்வாகிருக்கிறதா?
எத்தனை படங்கள் வந்தாலும் எது ஜூரிக்களுக்கு பிடித்திருக்கிறது, எது மனதை தைக்கிறது என்பது தான் முக்கியம். நாம் அத்தனை பேரும் அந்த வெள்ளத்தை சந்தித்தவர்கள் தான். யார் சந்திக்கவில்லை? நானே படகை எடுத்து கொண்டு என்னால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறேன். அது கண்ணுக்கு எதிரே பார்த்தது. சுனாமி வந்ந போது எவ்வளவு கஷ்டப்பட்டோம். கண்ணால் பார்த்த விஷயத்தை நிச்சயமாக அது பாதிக்கும். அந்த எமோஷன் ’2018’ திரைப்படத்தில் இருந்ததால் தான் அதை தேர்வு செய்தோம்.
இவ்வாறு பெப்சி விஜயன் பேசினார்.
தொடர்ந்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர், இப்போது வரைக்கும் விஜய் அரசியல்வாதியா? இல்லை. பிறகு ஏன் அரசியல் காரணங்களுக்காக என்று சொல்கிறீர்கள். லியோ மிகவும் பிரம்மாண்டமான படம். லோகேஷின் விஷன் சரியாக வரும் வரை விடமாட்டார். எந்த துறையிலும் வேலையை சரியாக வாங்க கூடிய திறமைமிக்கவர். அதனால் இப்போது வேண்டாம் மற்றொரு நாள் வைத்து கொள்ளலாம் என்று நினைக்கலாம். உண்மையான காரணம் எனக்கு தெரியவில்லை. மறுபடியும் நடத்தினால் எல்லாரும் பார்ப்போம் என்று கூறினார்.







