முழு ஊரடங்கு காலத்தில் மக்கள் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு ஏன் அறிவிக்கப்பட்டது என்பது தொடர்பான பிரத்தியேக காணோலியை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
’நான் முதல்வராகப் பதவியேற்றதும், ஆவின் பால் விலை ரூ. 3 குறைப்பு, நகர்ப்புற சாதாரண பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் முழுச் செலவு அரசு ஏற்பது, கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.4000 வழங்குதல் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டேன். தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. கொரோனா தொடர்பாக மற்ற மாநிலங்களிலிருந்து வரும் தகவல் கவலையளிப்பதாக இருக்கிறது.
மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும், தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பின் தாக்கம் முதல் அலையைவிட இரண்டாவது அலையில் வேகமாகப் பரவுகிறது. இரண்டாவது அலையில் இளைஞர்களும், குழந்தைகளும் அதிகமாகப் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் தினம்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் இரண்டு வாரங்களில் தொற்று பரவும் வேகம் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். இப்போது முழு ஊரடங்கு அறிவிக்காவிட்டால், கொரோனாவை கட்டுப்படுத்துவது மருத்துவத் துறைக்குச் சவாலாக இருக்கும். இதுதொடர்பாக நேற்று அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோதும், மருத்துவ நிபுணர்களிடம் கேட்டபோதும் அவர்கள் ஊரடங்கைப் பரிந்துரை செய்தனர்.
ஊரடங்கு அறிவிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால், மே 10 முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்காமல் நோய்ப் பரவலைத் தடுக்க முடியாது என்பதை மனதில் வைத்து மக்கள் செயல்பட வேண்டும். அனைவரும் வீட்டில் இருங்கள். முகக்கவசம் அணியுங்கள். சிறிது அறிகுறிகள் இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்யுங்கள். பயம் மட்டும் வேண்டாம். இது குணப்படுத்தக்கூடிய நோய். இது கஷ்டமான காலம்தான் அதே நேரத்தில் கட்டக முடியாத காலம் அல்ல. கொரோனாவின் தொற்றுக்கு எதிராக நமது நடவடிக்கைகள் இன்று முதல் வேகம் எடுத்துள்ளது. அரசு உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நீங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.’ என்று அவர் தெரிவித்துள்ளார்







