டாக்சிக் பட விழாவில் கலந்து கொண்டது ஏன்? – நயன்தாரா விளக்கம்!

நான் முதன் முதலில் யஷ்ஷைச் சந்தித்தபோது பல விஷயங்கள் வியந்தேன் என்று நயனதாரா தெரிவித்துள்ளார்.

கீதுமோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, ருக்மணி வசந்த், ஹூமாகுரேசி உட்பட பலர் நடித்த படம் டாக்சிக். இந்த படம் வரும் 26ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த டாக்சிக் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா கலந்துகொண்டு பேசினார். அப்போது,
“அனைவருக்கும் வணக்கம். தான் வழக்கமாகத் திரைப்பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. தனக்கு மேடைகளில் பேசுவது சரியாக வராது என்பதால் அவற்றிலிருந்து தள்ளி இருக்கிறேன். இந்த ‘டாக்ஸிக்’ பட விழாவிற்குத் தான் வந்ததற்கு நடிகர் யஷ் மட்டுமே காரணம். யஷ் தனக்குத் தொலைபேசியில் அழைத்து அழைப்பு விடுத்த உடனே, மறுக்காமல் வந்தேன்.

தயாரிப்பாளர் வெங்கட் சார், நம் அனைவரையும் ஒன்றாகக் கொண்டு வந்ததற்கும், கீது கொண்டிருந்த பார்வையை நம்பியதற்கும் மிக்க நன்றி. மேலும் நான் பணிபுரிந்த மிகச்சிறந்த தயாரிப்பாளர்களில் நீங்களும் ஒருவர். ​ருக்மணி, தாரா, கியாரா, ஹுமா, அக்சய்… உங்கள் அனைவருக்கும் எனது அன்புகள்!

ருக்மணி, உங்களது பயணத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், நீங்கள் நடிக்கும் அற்புதமான திரைப்படங்களைப் பார்க்கிறேன். உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ​கியாரா, இது உங்களது திரைப்பயணத்திலேயே மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் சொன்னது போல, ‘டாக்சிக்’ படத்திற்கு முன் ஒரு கியாரா, ‘டாக்சிக்’ படத்திற்குப் பின் ஒரு கியாரா இருப்பார். டாக்சிக் உங்களது சிறந்த படமாக இருக்கும்.

நான் இதுபோல உரைகள் அதிகம் நிகழ்த்துவதில்லை, அதனால் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். நானும் இயக்குனர் கீதுவும் மிக நீண்ட, அழகான ஒரு பயணத்தைக் கடந்து வந்திருக்கிறோம். நானும் கீதுவும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறோம், 20 வருடங்களுக்கு முன்பு. ​அவர் என்னை இந்தப் படத்திற்காக அழைத்தபோது, எனக்குச் சரியாகத் சொல்ல தெரியவில்லை. ஏனென்றால் படத்தில் பல நடிகர்கள் இருக்கிறார்கள். வழக்கமாக அதிக நடிகர்கள் இருக்கும் படங்களைத் தேர்ந்தெடுப்பதில் நான் சற்று கவனமாக இருப்பேன். அவர் என்னிடம் 10 மில்லியன் கேள்விகள் கேட்டார். சரி, நீங்கள் வந்து கதையைக் கூறுங்கள் என்றேன். கதை கேட்டதும், ‘யார் இந்தப் பெண்? நாம் இதுவரை பார்த்திராத இந்த இயக்குனர் யார்?” என ஆச்சரியப்பட்டேன். நீங்கள் ஒரு நம்பமுடியாத விஷயத்தைப் பார்க்கப் போகிறீர்கள்.
டிரைலர் பார்த்திருப்பீர்கள் அது அற்புதமாக இருக்கிறது. ஆனால் படம்..உங்களை அசர வைத்துவிடும்!

அடுத்ததாக… நான் முதன்முதலில் யஷ்ஷைச் சந்தித்தபோது பல விஷயங்கள் வியந்தேன். என்னை நம்புங்கள், நான் பல சூப்பர் ஸ்டார்களுடன், பல நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். அனைவரும் பெரியவர்கள், கூலானவர்கள், திறமையானவர்கள். ஆனால் யஷ்ஷை முதன்முதலில் சந்தித்தபோது, அவரிடம் இருக்கும் அந்தப் பிரமாண்டமான பிம்பம் நேரிலும் அப்படியே இருந்தது. “ஓ சரி, நான் ராக்கி பாயின் ராஜ்யத்திற்குள் நுழைகிறேனா?” என்பது போல் இருந்தது! டிரைலரில் பார்ப்பது போலவே தான் உண்மையிலும் இருக்கிறார். ஆனால் அதையும் தாண்டி, அவரது உழைப்பைப் பற்றி அனைவரும் பேசினார்கள்.

இவரை விடக் கடினமாக உழைக்கும் ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை! படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் அவர் உழைக்கும் விதத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். இந்த மனிதர் தனது வாழ்க்கையின் 4, 4.5 ஆண்டுகளை இப்படத்திற்காகக் கொடுத்திருக்கிறார். அவர் தனது வாழ்க்கையை, குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை, குழந்தைகளுக்கான நேரத்தை, தனது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறார். ஒரு சாதாரண மனிதனாக அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் தியாகம் செய்துள்ளார். அவர் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். ஸ்கிரிப்ட் எவ்வாறு நகர்கிறது, படப்பிடிப்பு எப்படிப் போகிறது, ஒவ்வொரு நடிகரும் சவுகரியமாக இருக்கிறார்களா, தங்களது சிறந்த நடிப்பைக் கொடுக்கிறார்களா என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்.

மேலும், இயக்குனர் கீதுவை அவர் பார்த்துக்கொண்ட விதம்… ஒரு நடிகர் தனது இயக்குனரை இப்படிப் பார்த்துக்கொண்டதை நான் பார்த்ததே இல்லை. நீங்கள் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் என்பது தெரியும், ஆனால் ஒரு தயாரிப்பாளர் கூட இப்படிப் பார்த்துக் கொண்டதில்லை. உங்களின் மீது அளப்பரிய அன்பும் மரியாதையும் உள்ளது யஷ்! ஒரு நடிகராக, தயாரிப்பாளராக, ஒரு மனிதராக, ஒரு கணவராக, குடும்பத் தலைவனாக, தந்தையாக உங்களை மிகவும் மதிக்கிறேன். நீங்கள் இன்று இருக்கும் இந்த இடத்திற்கு உங்களின் கடின உழைப்பு தான் காரணம். இவ்வாறு நயன்தாரா பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.