மேற்கத்திய நாடுகளின் நெருக்கடிக்கு அடிபணியாமல் சுதந்திரமான வெளியுறவுக்கொள்கையை இந்தியா கடைபிடிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீண்டும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் நிகழ்ந்த அரசியல் குழப்பத்தில் அந்நாட்டு பிரதமர் பதவியிலிருந்து இம்ரான்கான் விலகினார். தமது அரசுக்கு எதிராக வெளிநாட்டு சதி நிகழ்த்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் இம்ரான்கான், இன்று அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லாகூரில் இன்று தொடங்கிய இந்த நடை பயணத்தை வரும் 4ந்தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் நிறைவு செய்கிறார். நடைபயண தொடக்க நிகழ்ச்சியின்போது பாகிஸ்தான்-தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தொண்டர்களிடையே உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் இம்ரான்கான், இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கைக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
இந்தியா எடுக்கும் முடிவுகள் இந்தியாவிற்குள்ளேயே எடுக்கப்படுவதாகக் கூறிய இம்ரான்கான், அந்த முடிவுகளில் வெளிநாடுகள் தலையிடுவதில்லை என்று தெரிவித்தார். மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் இருந்தாலும் அதனையும் மீறி இந்தியாவால் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க முடிவதாக அவர் கூறினார். ஆனால் மேற்கத்திய நாடுகளுக்கு அடிமைபோல் இருக்கும் பாகிஸ்தானால் இது போல செய்யமுடிவதில்லை என்றும் இம்ரான்கான் விமர்சித்தார். சுதந்திரமான வெளியுறவுகொள்கையை இந்தியா கடைபிடிப்பதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார். இந்தியா உறுதியான நிலைப்பாட்டுடன் தங்கள் நாட்டு மக்களின் நலனுக்கு ஏற்ப வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதாக கூறிய இம்ரான்கான், ஆனால் பாகிஸ்தான் அரசால் அதனை செய்யமுடிவதில்லை என சாடினார்.
ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பேசினார். ஐஎஸ்ஐ அமைப்பு குறித்து தனக்கு நிறைய விஷயங்கள் தெரியும், அதனை அம்பலப்படுத்தவும் முடியும் எனக் கூறிய இம்ரான்கான், பாகிஸ்தானுக்கு தீங்கு விளையக் கூடாது என்பதற்காகவே தாம் அமைதி காத்து வருவதாக ஆவேசமாக கூறினார்.