“ சந்திரயான் – 3 ” வெற்றிகரமாக நாளை தரையிறங்கப்பட உள்ளது. இதற்கான நிலவின் தென் துருவத்தை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
‘சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
நிலவுக்கு மிக நெருக்கமான, இறுதிக் கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து லேண்டா் கலன் கடந்த 17ஆம் தேதி விடுவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் – 3 நிலவில் தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தற்போது தீவிரம் காட்டி வருகிறது. நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் ஆக.23-ஆம் தேதி மாலை 6.04 மணியளவில் மேற்கொள்ளப்படவுள்ளன.
லேண்டரின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு பூஜ்ஜிய நிலையை எட்டியதும் நிலவில் மெதுவாக கலன் தரையிறக்கப்படும். இதற்கான காலம் வெறும் 19 நிமிடம் தான்- ஆனால் ‘சந்திரயான்-3 திட்டத்தின் மொத்த வெற்றியும் அந்த 19 நிமிடங்களில் தான் உள்ளது. சந்திரயான்-3ல் விக்ரம் லேண்டர் பாதுகாப்பாக தரையிறங்கும் பகுதியைக் கண்டறிய உதவுவதற்காக அமைக்கப்பட்ட கேமரா மூலம் எடத்த படங்களை இஸ்ரோ வெளியிட்டது.
நேற்று சந்திரயான் 2 ஆர்பிட்டர் – சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் இடையே தகவல் தொடர்பு வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ‘Welcome, buddy!’ என விக்ரம் லேண்டரை சந்திரயான் 2 ஆர்பிட்டர் வரவேற்றதாகவும் இஸ்ரோ தெரிவித்தது. சந்திரயான் 2 தோல்வியை தழுவியபோதும் அதிலிருந்த சந்திரயான் 2 ஆர்பிட்டருடன் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை ஏற்படுத்தியிருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது.
இதனால், சந்திரயான் 2 ஆர்பிட்டர் இதுவரை எடுத்த புகைப்படங்கள் மற்றும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு லேண்டர் கலனை நிலவில் பத்திரமாக தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
“சந்திரயான் 3 திட்டமிட்டபடி செயல்பட்டு வருகின்றது. விக்ரம் லேண்டர் அனுப்பிய புகைப்படங்கள் சந்திரயான் 3 ஐ நிலவில் தரையிறங்குவதற்கான இடத்தை தேர்வு செய்ய வசதியாக இருக்கும். திட்டமிட்டபடி நாளை மாலை 06.04 சந்திரயான் 3 தரையிறங்கும். நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் மாலை 5.20 மணிக்கு நேரலை செய்யப்படும்” என இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
நிலவில் தரையிறங்க தென் துருவத்தை தேர்ந்தெடுத்தது ஏன்..?
சந்திராயன் 3 தரையிறங்குவதற்கு நிலவின் தென் துருவத்தை தேர்ந்தெடுள்ளது. இதேபோல ரஷ்யாவின் லூனா 25 விண்கலத்தையும் தரையிறக்க தென் துருவமே தேர்ந்தெடுக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக லூனா 25 நிலவில் விழுந்து நொறுங்கியதால் அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

நிலவின் தென் துருவம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான மிக முக்கியமான காரணம் என்னவெனில் தென் துருவம் சூரிய ஒளி விழாத பகுதி. அதன் காரணமாக, அங்கு குளிர் நிலையும், உறை நிலையும் இருக்கும். நிழல் பகுதியான தென் துருவத்தில் ஹைட்ரஜன், நீர்மம், பனி ஆகியவை நிறைந்திருக்கும்.
இதைத் தவிர, ஹீலியம்-3 போன்ற கனிமங்களும் அதிகமாக தென் துருவத்தில் இருக்க வாய்ப்புள்ளது. தென் துருவத்தில் இடம்பெற்றுள்ள இந்த கூறுகளைக் கொண்டு ஆய்வு செய்வதன் மூலம் சூரியக் குடும்பத்தின் தோற்றத்தைக் கணக்கிட முடியும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
நிலவின் தென் துருவத்தில் படிந்திருக்கும் பனிக்கட்டியில் நிறைய தண்ணீர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனித்துவமான நிலப்பரப்பு காரணமாக மின் உற்பத்தி சாத்தியமாகும். ஒருபுறம், ஒரு பெரிய நிழல் பகுதி உள்ளது, மறுபுறம், நிறைய சிகரங்கள் உள்ளன. மேலும் இந்த சிகரங்கள் நிரந்தரமாக சூரிய ஒளியின் கீழ் இருக்கும். அதன் காரணமாகவே, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.
தென் துருவத்தில் தரையிறங்க முயற்சித்த ரஷ்யாவின் லூனா 25 தோல்வியை தழுவியதால் இந்தியாவின் முயற்சியை உலகமே உற்று நோக்கி வருகிறது.








