இன்று நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொள்கிறது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா, மலேசியா அணிகள்
முன்னேறியுள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி
விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில்
மலேசியா, நடப்பு சாம்பியனான கொரியாவை எதிர்கொண்டது. இதில் மலேசியா 6-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
மலேசியா அணியின் வெற்றிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மலேசிய
அணியின் பயிற்சியாளர் அருள் அந்தோணி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது
மிகவும் பெருமையாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் எந்த அணி இறுதி போட்டியில் விளையாடினாலும் அதற்கு தகுந்தாற்போல தயாராகி விளையாடுவோம் என அவர் கூறினார்.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின.
இதில் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5-0 என்ற கோல்
கணக்கில் ஜப்பானை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியா
தரப்பில் அக்ஷ தீப் சிங், மந்தீப் சிங், சுமித், கார்த்திக் மற்றும் கேப்டன்
ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.
இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததை அடுத்து, இந்திய வீரர் கார்த்திக்
செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், போட்டிக்கு
முன்னதாக அணியில் உள்ள அனைவரிடமும் கலந்து பேசினோம். திட்டமிட்ட படி விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா இதுவரை 3 முறை சாம்பியன்
பட்டம் வென்றுள்ளது. அதே சமயம் மலேசியா அணியை பொறுத்தவரை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இரு
அணிகளும் மோதுகின்றன.
இப்போட்டியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழ்நாடு
முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்து, வெற்றி பெறும் அணிக்கு
பரிசளிக்க உள்ளனர்.







