மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 3 மசோதா பெயர்களை இந்தியில் இருந்து
ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டும் என திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
“மத்திய அரசு மக்களவையில் இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் சட்டம், இந்திய
எவிடன்ஸ் சட்டம் ஆகிய 3 சட்டங்களில் இருந்து புதிய சட்டங்களை கொண்டு வர மசோதா
அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 3 மசோதாக்களின் பெயர்கள் இந்தியில் உள்ளது.
சட்டங்களின் பெயர்கள் இந்தியில் இருப்பது அரசியலமைப்பு பிரிவுக்கு எதிரானது.
மசோதா உள்பட எது தாக்கல் செய்தாலும் அது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என
அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவில் பல்வேறு மொழிகள் உள்ளதால் பொதுவான மொழியாக ஆங்கிலம் உள்ளது. 3 சட்டங்களும் இந்தியில் உள்ளதால் என்ன சட்டம் என மக்களுக்கு புரியாது. அந்த பெயர்களை உச்சரிக்க கடினமாக இருக்கிறது. இந்த நடவடிக்கை இந்தியா முழுவதும் இந்தியை கட்டாயமாக்க வழிவகுக்கிறது. 3 மசோதாகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் மாற்ற வேண்டும். கட்டாய இந்தி திணிப்பாகவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் உள்ளதால் இந்த மசோதாவை நிறைவேற்ற கூடாது” என வில்சன் தெரிவித்தார்.







