மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் போல் தந்தை, மகன் அமைச்சர்களாக இருந்தவர்கள் யார் யார்?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ளார். அவரது மகனும், திமுக.,வின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி, தந்தையின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இதற்கு முன், இதே போல் தந்தை, மகன் அமைச்சர்களாக இருந்தவர்கள் யார்? என்று…

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ளார். அவரது மகனும், திமுக.,வின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி, தந்தையின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இதற்கு முன், இதே போல் தந்தை, மகன் அமைச்சர்களாக இருந்தவர்கள் யார்? என்று பார்க்கலாம் 

தந்தைக்கு பின் மகன் அல்லது மகள் என வெவ்வேறு கால கட்டங்களில் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர், மாநில முதலமைச்சர் மற்றும் பிரதமராக பொறுப்புக்கு வருகின்றனர். மற்றொரு புறம் கணவணும் மனைவியும், தந்தையும் மகனும் சமகாலத்தில் எம்.எல்.ஏ வாக, எம்.பியாக இருந்த வரலாறும் உண்டு.

ஆனால் ஒரு சிலர் மட்டுமே தந்தை முதலமைச்சராகவும், அதே அமைச்சரவையில்- மகனும் அமைச்சராக இடம் பெற்ற வரலாற்றை படைக்கின்றனர்.

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க முன்னாள் தலைவருமான மு.கருணாநிதி 33 வயதில் எம்.எல்.ஏ வாக தேர்வானார். 3ம் முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வான போது அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக 43 வயதில் பொறுப்பேற்றார்.

2006ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்தாவது முறையாக பொறுப்பேற்றார் மு.கருணாநிதி. அப்போது திமுக இளைஞரணி செயலாளராகவும், சென்னை மாநகராட்சி மேயராகவும் அனுபவம் பெற்றிருந்தவரும்,, நான்காவது முறையாக எம்.எல்.ஏ.,வாகவும் தேர்வு செய்யப்பட்ட தமது மகன் மு.க.ஸ்டாலினுக்கு ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் பொறுப்பை 53 வயதில் அளித்தார்.

பிறகு 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின் துணை முதலமைச்சராகவும் ஸ்டாலின் பொறுப்பேற்றார். தந்தை கருணாநிதியின் மறைவுக்கு பின் கட்சியின் தலைவரான ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலில் பெரு வெற்றியை பெற்றார். 2021ம் ஆண்டு தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி, 45 வயதில் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்திற்கு 2014ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பொறுப்பேற்றார். 2017ம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவின் மகன், நர.லோகேஷ் அமைச்சரராக பொறுப்பேற்றார்.

 

ஆந்திராவிலிருந்து உதயமான தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் கே.சந்திரசேகர ராவ் பொறுப்பேற்றார். அப்போது முதல் அவரது மகன் கே.டி.ராமாராவ் பல முக்கிய துறைகளின் அமைச்சராக உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்றார். அப்போது, அவரது மகன் ஆதித்யா தாக்கரேவும் அமைச்சராக பொறுப்பேற்றார்.

கர்நாடக மாநிலத்தில் 2006-07 மற்றும் 2018-19 ஆகிய கால கட்டங்களில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா வின் இளைய மகன் குமாராசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவரது அண்ணன் ரேவண்ணா பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்.

கர்நாடக மாநிலத்தில் பாஜகவின் முக்கிய புள்ளிகளாக வலம் வந்த ரெட்டி சகோதரர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது முக்கிய துறைகளின் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசில் 2015 முதல் 2017 மற்றும் 2022 ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை , ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் மகன்களான தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகவும், தேஜ் பிரதாப் யாதவ் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கின்றனர். லாலுவின் மனைவியும், முன்னாள் முதலமைச்சருமான ராப்ரி தேவி சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார்.

-ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.