முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

எளிமை…யதார்த்தம்…துணிச்சல்…உதயநிதி ஸ்டாலின்…


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

உழைப்பு…உழைப்பு…உழைப்பு… அதற்கு மறுபெயர்தான் ஸ்டாலின் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பலமுறை பாராட்டியிருக்கிறார். அவர் தற்போது உயிரோடு இருந்திருந்தால் உதயநிதி ஸ்டாலினைப் பார்த்து எளிமை…யதார்த்தம்…துணிச்சல் என புகழ்ந்துபேசியிருப்பார்.

உதயநிதி பொதுவாழ்க்கையில் களம் இறங்கியபோது, அரசியலில் கருணாநிதி, ஸ்டாலின் உருவாக்கி வைத்திருக்கும் அடையாளங்களை தாண்டி இவர் எப்படி தனித்துதெரியப்போகிறார் என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கக் கூடும். ஆனால் எளிமை…யதார்த்தம்…துணிச்சல் என பயணித்து அரசியலில் தனக்கென தனிப்பாதையை உருவாக்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எப்போதும் எதிலும் யதார்த்தமான வித்தியாசமான அணுகுமுறையே உதயநிதி ஸ்டாலினின் ஸ்பெஷல். அவர் திரையுலகில் நடிகராக களம் இறங்கியபோது தனக்கு பஞ்ச் டயலாக்குகள் வைத்து, தான் அடித்தால் பத்து பேர் பறந்து விழுவதுபோன்ற காட்சிகளை கொண்ட படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கலாம். ஒரு மாஸ் ஹீரோவாக தன்னை முன்னிறுத்தி அதன் மூலம் அரசியலில் வருகைக்கு அடித்தளம் போடும் சூழலை உருவாக்க முயன்றிருக்கலாம். அரசியல் பின்புலம் கொண்ட உதயநிதி ஸ்டாலின், ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி வெளியானபோது, அரசியலுக்காகவே அரிதாரம் பூசுகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. ஆனால் அந்த சுவடே தெரியாத அளவிற்கு அவரது முதல் படம் அமைந்தது. எளிமையான ஒரு காதல் கதையை காமெடியாக சொல்லும் படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். உதயநிதி இப்படி எளிமையாக தனது நடிப்புலக பயணத்தை தொடங்குவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். படத்தில் தன்னைவிட சந்தானத்திற்கு அதிக கைத்தட்டல்கள் பெறும் காட்சிகளையும் அனுமதித்தார். இந்த வித்தியாசமான, எளிமையான, வெளிப்படையான அணுகுமுறை அவருக்கு வெற்றியை கொடுத்தது. ”ஒரு கல் ஒரு கண்ணாடி” படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒரு நடிகராக மக்கள் மத்தியில் அவரை கொண்டும் சேர்ந்தது. ஒருவேளை முதல் படத்தில் ஒரு மாஸ் ஹீரோவாக, பஞ்ச் டயலாக்குகள் பேசி நம்ப முடியாத சண்டைக்காட்சிகளில் அவர் நடித்திருந்தால் அந்த படம் வழக்கமான ஒன்றாக தோன்றி தோல்வி அடைந்திருக்கலாம். ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு பின் வந்த படங்களில்கூட தனது உடல்வாகுக்கு ஏற்ற தனக்கு பொருந்தக் கூடிய கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தார். இந்த அணுகுமுறைதான் அரசியல்வாதி உதயநிதி ஸ்டாலினின் அறிமுகம் தேவையில்லாத அளவிற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலினை மக்கள் மத்தியில் கொண்டு சென்றது.

அரசியலிலும் இதே போன்ற எளிமையான, யதார்த்தமான மாறுபட்ட அணுகுமுறைகளை கடைபிடித்து வெற்றிகளை பெற்று வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தீவிர பரப்புரையில் அவர் களம் இறங்கியபோது, பேச்சாற்றலுக்கு பெயர்போன பாரம்பரிய அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால், இடிமுழக்கமாக நரம்பு படைக்க அடுக்குமொழி பேசி மக்களை கவர முயற்சிப்பார் என்றே பலருக்கு தோன்றியிருக்கும். ஆனால் அதிலும் மாறுபட்டு நின்றார் உதயநிதி. நாட்டு நடப்புகளையும், அரசியல் அசைவுகளையும் மக்களுடன் அவர்கள் வழக்குமொழியிலேயே உரையாடுவதுபோல் அவரது பரப்புரை அமைந்தது. மக்களை தனது பரப்புரைகள் மூலம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். தான் ஒரு பெரிய தலைவரின் மகன் என்கிற பந்தா இல்லாமல், தனது வேன் பிரச்சாரங்களின்போது அண்ணா, ப்ளீஸ், கொஞ்சமா தள்ளி நில்லுங்கண்ணா பின்னால இருக்கிறங்களுக்கும் தெரியட்டும் என கூட்டத்தை தானே ஒழுங்குபடுத்துவார். அவரது இந்த எளிமை மக்கள் இதயங்களில் உதயநிதியை உட்கார வைத்தது.

பரப்புரையின்போது வழக்கமான அரசியல் பார்மாலிட்டிகள் எதுவும் இல்லாமல், யதார்த்தமாகவும், எளிமையாகவும் பேசியது, உதயநிதியின் பரப்புரைகளை மக்களிடையே வெற்றிபெற வைத்தது. நாட்டு நடப்புகளையும், திமுகவின் கொள்கைகளையும் அவர்களுக்கு எளிதில் புரிய வைத்தது. அதே நேரம் எந்த பூசிமெழுகலும் இல்லாமல் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நேரிடையாகவே சவால்விட்டு தன்னுடைய துணிச்சலையும் தைரியத்தையும் சுட்டிக்காட்டினார் உதயநிதி. அவரது உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் பலனாக தற்போது அமைச்சர் பதவி வந்துசேர்ந்துள்ளது. 45 வயதில் அமைச்சராகி தமிழகத்தில் மிகவும் இளம் வயதிலேயே அமைச்சரானவர்கள் பட்டியலில் அவர் இணைந்துள்ளார். அமைச்சர் பதவியை அடையும் அளவிற்கு ஒரு பழுத்த அரசியல்வாதியின் பக்கவமும், அணுகுமுறையும் தன்னிடம் இருப்பதை இந்த இளம் வயதிலேயே பலமுறை நிரூபித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்தவரும், தமிழக முதலமைச்சராக 5 முறை அரியணை ஏறியவருமான கருணாநிதி, எதிர்க்கட்சியினரின் மனது புண்படாமல் அதே நேரம் அவர்களது விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதில் கைதேர்ந்தவர். இதற்காக அவர் பயன்படுத்தும் சிலேடைகளும் சொல்லாடல்களும் தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் பிரபலம்.

அந்த வகையில் தாத்தாவை நினைவூட்டும் பேரனாக எதிர்க்கட்சியினருக்கு சிலேடையாக பதில் அளிப்பதில் தனது புத்திசாலித்தனத்தை பலமுறை நிரூபித்துள்ளார் உதயநிதி. ஒரு முறை சட்டப்பேரவை முடிந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டிற்கு கிளம்பும்போது, தவறுதலாக உதயநிதி ஸ்டாலின் காரை எடுத்துச் சென்றுவிட்டார். இது குறித்து பதில் அளித்த உதயநிதிஸ்டாலின், “அடுத்தமுறை எடப்பாடி பழனிசாமி எனது காரை தாராளமாக எடுத்துச் செல்லட்டும். ஆனால் தயவுசெய்து கமலாலயம் பக்கம் போய்விட வேண்டாம்“ என சாமர்த்தியமாக செய்த அரசியல் நையாண்டி இணையத்தளங்களில் வைரலானது. திராவிட இயக்கத்திலிருந்து வந்த அதிமுக, பாஜக பக்கம் செல்ல வேண்டாம் என்கிற செய்தியை நாசூக்காக உதயநிதி குறிப்பிட்டது அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்தது.

உதயநிதியை வெகுவிரைவாக மக்கள் மனதில் கொண்டு சேர்த்ததில், தனது நிறை குறைகளை வெளிப்படையாக குறிப்பிட்டு அவர் அளித்த பேட்டிகளுக்கும் முக்கிய இடம் உண்டு. தனது பலத்தை மறைத்தாலும் பலகீனத்தை மறைக்காத அளவிற்கு உதயநிதி அளித்த பேட்டிகள் அவரை ஒரு வெளிப்படையான மனிதராக பொதுமக்களுக்கு அடையாளம் காட்டியது. தமிழக அரசியலிலில் தவிர்க்க முடியாத சக்தியாக உதயநிதி இருந்துவரும் காலத்தில்தான் சினிமாவிலும் அவர் நடிகராக, தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக வலம் வந்தார். ஆனால் தனது அரசியல் அடையாளம் எதையும் காட்டிக்கொள்ளாமல் திரையுலகில் எளிமையாக வலம் வந்தார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ் சினிமா நசுக்கப்படும் என விமர்சித்தவர்கள், சினிமாவை விட்டு உதயநிதி சென்றுவிடக்கூடாது என கோரிக்கை வைக்கும் அளவிற்கு கலை உலகிற்கு நம்பிக்கையூட்டினார் உதயநிதி ஸ்டாலின். ஆடியோ வெளியீடு விழாக்களில், தனது திரையுலக நண்பர்களை அவர் கலாய்ப்பது, தன்னை கலாய்க்க அவர்களை அனுமதிப்பது என அரசியல் பந்தாக்கள் எதுவும் இல்லாமல் விழாவை கலகலப்பாக்கிவிடுவார் உதயநிதி. தமது அரசியல் பரப்புரைகளிலும் இதே பாணியில் அவர் காட்டிய எளிமையும், கலகலப்பும்தான் மற்ற தலைவர்களின் பிரச்சாரங்களிலிருந்து உதயநிதியின் பிரச்சாரத்தை மாறுபட்டு காண்பித்தது.  

பில்டப்…ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத வார்த்தை என்று உதயநிதி சொல்வது போல் சினிமா விழாக்களிலும், அரசியல் மேடைகளிலும் அவரது நடவடிக்கைகள் அமைந்திருக்கும். சைக்கோ படத்தின் சக்ஸஸ் மீட் அது. ஒரு படத்தின் வெற்றி விழாவில் அந்த படத்தின் கதாநாயகனை பேச அழைக்கும்போது அவருக்கு அதிக பில்டப்கள் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சைக்கோ படத்தின் சக்ஸஸ் மீட்டில் படத்தின் கதாநாயகன் உதயநிதியை  பேச அழைக்கும்போது நெறியாளர் தனது புகழ்ச்சியை தொடங்கும்போதே ஓடிவந்து அதனை தடுத்தார் உதயநிதி. கடைசியாக நான் நடித்த 4 படங்கள் சரியாக போகவில்லை என தனது தோல்விகள் குறித்தும் அந்த வெற்றி விழாவில் பேசினார் அவர்.  சமீபத்தில் வெளிவந்த கலகத் தலைவன் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஸ்கின் கேட்ட ஒரு கேள்வி உதயநிதியின் எளிமை எத்தகையது என்பதை உணர்த்தியது. ”ப்ளீஸ்” என்கிற வார்த்தையை பயன்படுத்த வேண்டிய அவசியம் உதய்க்கு தற்போது இருக்கிறதா? ஆனால் எல்லோரிடமும் அவர் ப்ளீஸ், ப்ளீஸ் என ப்ளீசிங்காகவே பேசி வருகிறார்” என்று மிஷ்கின் நெகிழ்ந்தார். நடிப்பில் உதயநிதி ஒரு சிவாஜியோ, கமலோ அல்ல ஆனால் பண்பில் தமிழ் சினிமாவில் உதயநிதி உயர்ந்து நிற்கிறார் எனக் குறிப்பிட்டு அந்த அரங்கத்தையும் நெகிழ வைத்தார் மிஷ்கின்.  முதல் படத்திலேயே அகில உலக சூப்பர் ஸ்டார் என்பது போன்று தன்னை புரெஜக்ட் செய்யும் அடைமொழிகளை பயன்படுத்தி வந்த ஹீரோக்களை பார்த்திருக்கிறது தமிழ் சினிமா. ஆனால் 13 ஆண்டுகள் திரையுலகில் நடிகராக வலம் வரும் உதயநிதி, பல வெற்றிப் படங்களை கொடுத்த பின்னரும் தனக்கு முன்னாள் அடைமொழிகள் எதையும் போட்டுக்கொள்ளவில்லை. அவர் எந்த பட்டத்தை போட்டுக்கொண்டாலும் அதனை கூறி கொண்டாடுவதற்கு லட்சக்கணக்கானோர் தயாராக இருந்தும் அந்த பந்தாக்களை உதயநிதி விரும்பவில்லை. 

அரசியல் மேடைகளிலும் தனக்கு கொடுக்கப்படும் பில்டப்புகளையும், புகழ்ச்சியுரைகளையும் அன்போடு கண்டித்தே வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இரண்டாம் கலைஞர், இளைய கலைஞர் என தன்னை தொண்டர்கள் அழைத்து வந்தபோது, அப்படி அழைக்க வேண்டாம் என உரிமையாக தொண்டர்களைக் கேட்டுக்கொண்ட உதய நிதி, ”திமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகளின் உழைப்பையும், அனுபவத்தையும் ஒப்பிடும்போது, நான் ரொம்ப சின்னவன் என்பதால் என்னை சின்னவர் என்று வேண்டுமானால் அழையுங்கள்” என கேட்டுக்கொண்டார். அந்த தன்னடக்கம், எளிமை, உழைப்புதான் தற்போது அமைச்சர் பதவி வரை உதயநிதியை உயர்த்தியிருக்கிறது.

-எஸ்.இலட்சுமணன்

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை இல்லை’ – சென்னை உயர் நீதிமன்றம்

Arivazhagan Chinnasamy

நீட் தேர்வு பாதிப்பு: நாளை அறிக்கை தாக்கல்

Halley Karthik

உக்ரைன் மாணவர்களுக்கு இங்கு சீட் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Arivazhagan Chinnasamy