சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகத்தையே உலுக்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை 2 கோடிக்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டனர். 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் எதிரொலித்தது.
எனினும், தற்போது கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. 3வது அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா 3ம் அலை ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவை தாக்கக்கூடும் எனவும், அதன் தாக்கம் மற்ற அலைகளை விட குறைவாக இருக்கும் எனவும் ஐசிஎம்ஆர் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்டரோஸ் ஆதனோம், “துரதிருஷ்டவசமாக கொரோனா பெருந்தொற்றின் 3வது அலை தொடக்கத்தில் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். டெல்டா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் கொரோனா தொற்றும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளதாக தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, பொதுமக்கள் கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. தற்போது, டெல்டா பிளஸ் வைரஸ் 111க்கும் அதிகமான நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







