கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி பிறந்தவர் சைலேந்திர பாபு. இவரது தந்தை இந்திய ராணுவ கப்பல் பிரிவில் பணியாற்றியவர். சைலேந்திர பாபு 1987ம் ஆண்டு தமிழ்நாடு கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார். தர்மபுரி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக பணியை தொடங்கிய இவர், கோபிச்செட்டிப் பாளைபாளையம், சேலம், திண்டுக்கல், செங்கல்பட்டு, சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை அடையாறில் துணை ஆணையராகவும் பணியாற்றினார்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜியாக பதவி உயர்வுபெற்ற அவர், சென்னையில் இணை ஆணையராகவும், பின்னர் திருச்சி டி.ஐ.ஜி. ஆகவும் பொறுப்பு வகித்தார். வடக்கு மண்டல ஐஜி ஆக பணியாற்றிய இவர், லஞ்ச ஒழிப்புத் துறையில் தலைமை அதிகாரி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி என தான் பணி புரிந்த பிரிவுகளில் எல்லாம் தடம் பதித்தார். பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டிஜிபியாகவும், பின்னர் ரயில்வே காவல்துறை டி.ஜி.பிஆகவும் பணியாற்றினார். ரயில்வே டிஜிபியாக பணியாற்றியபோது, பல்வேறு துறை சார்ந்த சீர்திருத்தங்களை செய்தார்.
உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, விளையாட்டுத்துறை, சைக்கிளிங் ஆகியவற்றில் பெரும் ஈடுபாடு கொண்டவர் சைலேந்திரபாபு. 2002 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டி, 2003 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற உலக தடகளப் போட்டி, 2007 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற உலகத் தடகளப் போட்டிகளிலும் இவர் அங்கம் வகித்துள்ளார்.

மேலும், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய தடகள வீரர்களுக்கு கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். புத்தக வாசிப்பு, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றுதல் என பல்துறை வித்தகரான இவர் சைக்கிளிங்கில் பெரும் ஆர்வம் கொண்டவர். 500 கி.மீ, 1000 கி.மீ என சைக்கிளிங் செல்வதோடு அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு மற்றவர்களுக்கும் உந்து சக்தியாக செயல்பட்டு வருகிறார். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்களும் ஐ.பி.எஸ். ஆகலாம், சாதிக்க ஆசைப்படு உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
கோவை காவல் ஆணையராக 2010-11ம் ஆண்டுகளில் பணியாற்றிய போது, சிறுவர்களான சகோதரன் மற்றும் சகோதரியை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தது, கோவை கொடிசீயா மைதானத்தில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடைபெறச்செய்தது என சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

காவல்துறையில் இவர் ஆற்றிய பணிகளை மெச்சும் வகையில், சிறப்பாக கடமையாற்றியமைக்கான குடியரசுத்தலைவர் விருது, உயிர் காக்கும் பணிகளை மேற்கொண்டமைக்கான பிரதமர் விருது, தமிழக முதலமைச்சரின் கேலண்டரி விருது, தமிழக சிறப்பு டாஸ்க் ஃபோர்சின் கேலண்டரி காவல்துறை பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்களை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







