முக்கியச் செய்திகள் இந்தியா

யார் இந்த முலாயம் சிங் யாதவ்?


ரா.தங்கபாண்டியன்

2004 ஆம் ஆண்டு பஞ்சாப்பை சேர்ந்த மன்மோகன் சிங்கும், 2014 ஆம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த நரேந்திர மோடியும் இந்தியாவின் பிரதமராகினர். இருவருமே இந்தியை தாய் மொழியாக கொள்ளாத மாநிலங்களை சார்ந்தவர்கள். இதனால் இந்தியை ஆட்சி மொழியாக கொண்ட உத்தரபிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவருமான முலாயம் சிங் யாதவின் கால் நூற்றாண்டுக்கால பிரதமர் கனவை அடியோடு தகர்த்தெறிந்தனர்.

வார நாட்களில் ஆசிரியர் பணி, மற்ற நேரங்களில் குத்துச் சண்டை பயிற்சியாளர் என இளஞ்சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் ஆசிரியராக, 1960-ம் ஆண்டுகளில், ஆசிரியர் – பயிற்சியாளர் என இரட்டைச் சவாரியில் பயணம் செய்தார். சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் அரசியல் பக்கம் பார்வையை திருப்பினார். அவர் எதிர்பார்த்ததை விட அரசியல் அவரை தன் வசப்படுத்தி கொண்டது. பிற்பாடு உத்திரப்பிரதேசத்தின் அசைக்கமுடியாத அரசியல் தலைவராக காலம் மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


உத்திரப்பிரதேச மாநிலத்தில் எட்டாவா மாவட்டம், சைபாய் கிராமத்தில் சுகர் சிங் யாதவ் மற்றும் மூர்த்தி தேவிக்கு 1939ம் ஆண்டு நவம்பர் 2022ம் தேதி பிறந்தார். எட்டாவாவில் உள்ள கர்ம் ஷேத்ரா கல்லூரியில் பி.ஏ அரசியல் அறிவியல் பட்டம் பெற்றார். ஷிகோஹாபாத்தில் ஏ.கே. கல்லூரியில் பி.டி பட்டம் பெற்றார். பின்னர் ஆக்ரா பல்கலைகழகத்தில் எம்.ஏ பட்டம் பெற்றார். ஆசிரியராக இருந்து கொண்டே சோசலிச தலைவர்களான ராம் மனோகர் லோகியா, ராஜ் நாராயணன் வழியில் அரசியல் பயணத்தை தொடங்கினார். 1967ம் ஆண்டு சம்யுக்த சோசலிச கட்சி சார்பில், ஜஸ்வந்த் நகர் தொகுதியிலிருந்து முதல் முறையாக உத்தர பிரதேச சட்டமன்றம் சென்றார். 1974 ஆம் ஆண்டு சரண்சிங்-கின் பாரதிய கிராந்தி தளம் சார்பில் வெற்றி பெற்று 2ம் முறையாக எம்.எல்.ஏ வாக தேர்வானார்.

 

1975-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அறிவித்த அரசியல் நெருக்கடி நிலையை, எதிர்த்ததால் 19 மாதங்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் முலாயம் சிங் யாதவ். 1977 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்றார் ராம் நரேஷ் யாதவ். அவரது அமைச்சரவையில் 3-ம் முறை எம்.எல்.வான முலாயம் சிங் யாதவ் கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது இளம் அமைச்சரவை சகாக்களாக இருந்த முலாயம் சிங் யாதவ்வும், கல்யாண் சிங்கும், பின்னாளில் முதலமைச்சராகவும், அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வலம் வந்தனர். 1980-ம் ஆண்டு லோக் தளம் கட்சியின் மாநில தலைவர் பதவி முலாயமை தேடி வந்தது. அடுத்த கட்ட உயர்வாக 1982-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்ட மேலவையில் எதிர்க்கட்சித் தலைவரானார்.


லோக்தளம், பிளவுபட்ட போது, ​​கிராந்திகாரி மோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கினார் முலாயம். 1989-ம் ஆண்டு இவருடைய கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும் காங்கிரஸ் ஆதரவுடன் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் முலாயம் சிங் யாதவ். முதலில் வி.பி சிங்கின் ஜனதா வுடன் இணைந்த முலாயம், பிறகு சந்திரசேகர் என இரு பிரதமர்களுக்கும் ஆதரவு அளித்து தன் அரசை நிலைப்படுத்தி கொண்டார். இதனிடையே காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றதால் முலாயம் ஆட்சி முடிவுக்கு வந்தது. சரண்சிங், தேவிலால் போன்ற தலைவர்களுடனும், கம்யூனிச தலைவர்களுடனும் நல்ல நட்புறவு கொண்டவர். ஜனதா அரசுகள் கவிழ்ந்த பின், 1992-ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியை முலாயம் சிங் ஆரம்பித்தார். 1993 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆதரவுடன் இரண்டாம் முறையாக உத்தரபிரதேச முதலமைச்சரானார். 1994 ம் ஆண்டு, உத்தரகாண்டிற்கு தனி மாநிலம் கோரிய இயக்கத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது அவருடைய ஆட்சியின் குறைபாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 1995 வரை அவரது ஆட்சி தொடர்ந்தது..

 

1996 ம் ஆண்டு மைன்புரி தொகுதியில் இருந்து மக்களவை எம்.பியாக தேர்வாகி முதல் முறையாக நாடாளுமன்றம் சென்றார் முலாயம். ஐக்கிய முன்னனி ஆட்சியில் தேவகவுடா, குஜ்ரால் என இரு பிரதமர்களின் ஆட்சியிலும், பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்ததுடன், டெல்லி அரசியலில் தன்னையும் ஒரு சக்தியாக மாற்றிக்கொண்டார். அடுத்தடுத்த தேர்தல்களில் பாஜக வென்றதால் மீண்டும் மாநில அரசியலுக்கே திரும்பினார். 1999-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இரண்டு முறை காங்கிரஸ் ஆதரவால் முதலமைச்சரான முலாயம், 1999-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக கூறினார். பின்னர் குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணனிடம் சென்று காங்கிரசுக்கு ஆதரவளிக்கவில்லை என்றவர், அத்துடன் காங்கிரசுக்கு ஆதரவளிக்க வந்த பிற கட்சிகளையும் பின் வாங்க வைத்தார். 2 ம் முறை பாஜக ஆட்சி அமைக்க முலாயம் மறைமுகமாக உதவுகிறார் என அப்போதே காங்கிரஸ் தலைவர்களும், அரசியல் நிபுணர்களும் கூறினர்.


சோசலிஸம் வழி வந்த தலைவர்களில், சிறிதும் நம்பகத்தன்மை இல்லாதவர் முலாயம். காங்கிரசுக்கு எதிர்ப்பு என்ற பாணியில், திறை மறைவில், மிகச்சிறிய அளவிலாவது பாஜகவுக்கு கடைசி கட்டத்தில் ஆதரவளிக்கிறார் என்ற மென்மையான விமர்சனமும் முலாயம் மீது உண்டு. 1999 ம் ஆண்டு சம்பல், கன்னோஜ் ஆகிய இரு தொகுதிகளில் எம்.பி யாக வென்றவர். 2000 ம் ஆண்டு கன்னோஜ் தொகுதி எம்.பியாக்கி மகன் அகிலேஷ் சிங் யாதவை அரசியலுக்கு கொண்டு வந்தார். தந்தையால் அரசியலுக்கு வந்த அகிலேஷ் சிங் யாதவ் 2012 ம் ஆண்டு இளம் வயதில் உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றார். 2002 ஆம் ஆண்டில் அமைந்த மாயாவதி அரசுக்கான ஆதரவை பாஜக ஒரே ஆண்டில் விளக்கி கொண்டதால் மாயாவதி ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் 2003-ம் ஆண்டு சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் 3ம் முறையாக முதலமைச்சரானார் முலாயம் சிங் யாதவ். இப்போது உத்தர பிரதேசத்திலிருந்து, உத்தர காண்ட் தனியாக பிரிக்கப்பட்டிருந்தது.

 

முதலமைச்சர் எம்.எல்.ஏ வாக தேர்வாக வேண்டும் என்பதால் 2004 ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற குன்னவூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 94 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தேர்தல் வரலாற்றில் முக்கிய பதிவுகளுள் ஒன்று. 10 முறை எம்.எல்.ஏ, ஒரு முறை எம்.எல்.சி, 7 முறை மக்களவை எம்.பியாகவும் தேர்வான பெருமைக்குரியவர் முலாயம் சிங் யாதவ். தற்போது மைன்புரி தொகுதி எம்.பியாக உள்ளார். முலாயமுக்கு மாலதி தேவி, சாதனா குப்தா என இரு மனைவிகள். இருவரும் இப்போது உயிருடன் இல்லை. நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி, இவரின் சகோதரர்கள் சமாஜ்வாதி ஆட்சியமைக்கும் போது அமைச்சர் எம்பி என அதிகார மையமாகி வருகின்றனர் என்று அதிக அளவில் விமர்சிக்க்கப்படுவதுண்டு. ராஷ்டிரிய ஜனதா கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு ஒரு வகையில் சம்பந்தியாகிறார் முலாயம் சிங் யாதவ்.

சமூக நீதி, மதச்சார்பின்மை, சோசலிசம் போன்ற அரசியல் சித்தாந்தை கைவிடாதவர் முலாயம் சிங் யாதவ். சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் மேம்பட அதிரடியாக சில திட்டங்களை கொண்டு வந்தார் முலாயம். அதனால் சில அமைப்புகளின் அதிருப்திக்கு ஆளாகினார். குண்டர்களின் ராஜ்ஜியம் முலாயம் ஆட்சி என்ற பெயரையும் சம்பாதித்து கொண்டார். ஆனால் அவர் மகன் அகிலேஷ், தந்தையை விட சிறப்பாக ஆட்சி நடத்தி இந்த கெட்ட பெயரை குறைத்தார் என அரசியல் நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இவ்வாறு வாழ்ந்து வந்த முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார்.

  • த.எழிலரசன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நேபாளத்தில் கோலாகலமாக நடைபெற்ற பசு திருவிழா

Gayathri Venkatesan

மழைக்கான விடுமுறைகள் சனிக்கிழமைகளில் ஈடு செய்யப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ்

EZHILARASAN D

வெள்ளத்திற்கு காரணம் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள்தான்: சசிகலா

EZHILARASAN D