உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரான முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவால் முலாயம் சிங் யாதவ் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “முலாயம் சிங் யாதவ் ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமை. அவசரநிலை பிரகடனபடுத்தியபோது ஜனநாயகத்திற்கான ஒரு முக்கிய சிப்பாயாக அவர் செயல்பட்டார். பாதுகாப்பு அமைச்சராக அவர் ஒரு வலுவான இந்தியாவுக்கு பணி செய்தார். அவருடைய பாராளுமன்ற தேர்தல் உரைகள் மற்றும் செயல்பாடுகள் புத்திசாலித்தனமாகவும், தேசிய நலன்களைப் பற்றியும் வலியுறுத்துவதாக இருந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியலில் ஈடு செய்ய முடியாத இழப்பு: காங்கிரஸ் கட்சி இரங்கல்
காங்கிரஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “அவரது ஆன்மா இறைவனின் காலடியில் இளைப்பாறட்டும் என்றும் அவரது குடும்பத்தாருக்கு மனவலிமையும், அவரது ஆதரவாளர்களுக்கு இவ்விழப்பினை தாங்கும் சக்தியும் கிடைக்கட்டும்.
முலாயம் சிங் பிரிவில் வாடும் அகிலேஷ் யாதவ் குடும்பம் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் அனைத்து தொண்டர்களுடனும் இந்த கடுமையான நேரத்தில் வருத்தத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்” என்றார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா இரங்கல்
உத்தரப் பிரதேசம் மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு முலாயம் சிங் யாதவின் பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.








