லியோ திரைப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த் என இரண்டு கதாநாயகிகள் இடம்பெற, அதில் படத்தில் யார் உயிரிழப்பார்கள் என கேட்ட கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் பதில் அளித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் லியோ. லலித் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவு ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.
விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள இந்த படத்தில் சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளனர். ‘லியோ’. திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 5-ம் தேதி வெளியானது.
இந்த படத்தின் டிரைலரில் நடிகர் விஜய் கதாபாத்திரம் தகாத வார்த்தை ஒன்றைப் பேசியிருப்பது சர்ச்சையானது. இதற்கு லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்தார். லியோ போஸ்டரில் த்ரிஷா புகைப்படத்துக்கு ரசிகர்கள், “என்ன போஸ்டரிலே த்ரிஷாவை கொலை செய்து விட்டாரே லோகேஷ்” என கிண்டலாக மீம்ஸ்களை பதிவிட்டு வந்தனர்.
லோகேஷ் படங்களில் நாயகிகள் என்றாலே இறந்துவிடுவார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இது குறித்து நேர்காணல் ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், “இது குறித்து த்ரிஷா மேடமும் என்னிடம் கேள்வி கேட்டார். நானும் ப்ரியா ஆனந்தும் இருக்கிரோம். இருவரில் யாரைக் கொலை செய்ய போகிறீர்கள்” எனக் கேட்டார். உங்களது ஆசைக்காகவே யாரையாவது கொலை செய்து விடுவோம் என ஜாலியாக கூறினேன்.
ப்ரியா ஆனந்த் விக்ரம் படத்திலே நடிக்க வேண்டியது மிஸ் ஆகிவிட்டது. லியோவில் கௌதம் மேனனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படம் வெளியான பிறகே யார் இறப்பார்களென தெரியும். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்திலும் முதலில் ப்ரியா ஆனந்த் நடிக்கவிருந்ததும் பின்னர் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது” என தெரிவித்தார்.
லியோ திரைப்படம் அக்.19-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஆனால் ஒரு நாளைக்கு முன்பே படம் வெளியாவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.







