முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

30 கொலைகள்…40 ஆண்டுகள் சிறைவாசம்…யார் இந்த சோப்ராஜ்?…


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

இந்தியா, தாய்லாந்து, நேபாளம், மலேசியா, பிரான்ஸ், ஆப்கானிஸ்தான், துருக்கி, கிரீஸ்…இப்படி அடுக்கிக்கொண்டே போனால், அது என்ன ஒருவர் சுற்றிப்பார்த்த நாடுகளின் பட்டியலா என்று கேட்கத் தோன்றும். ஆனால் அந்த நபரை பொருத்தவரை இது அவனது குற்றச்சரித்திரம் பதிந்த நாடுகளின் பட்டியல்.

ஒரு காலத்தில் சர்வதேச போலீசுக்கே சவால்விட்டு தொடர் கொலைகளையும், கொள்ளைகளையும் நிகழ்த்திய சார்லஸ் சோப்ராஜ் தனது 78வது வயதில் நேபாள சிறையிலிருந்து விடுதலையாகியிருக்கிறான்.  இந்த 78 வயதிற்குள் சுமார் 40 ஆண்டுகளை இந்தியாவிலும், நேபாளத்திலும் சிறைக்கம்பிகளுக்குள் கழித்த சோப்ராஜ் மீதமுள்ள காலத்தில் நிகழ்த்திய கொடூரக் குற்றங்கள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு திகிலூட்டுபவை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

70களில் தென்கிழக்கு ஆசிய நாடுகளை அச்சுறுத்திய இந்த சீரியல் கில்லர் செய்த கொலைகளின் எண்ணிக்கை மட்டும் 30 எனக் கூறப்படுகிறது. இதில் 12 கொலைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. சோப்ராஜ் தனது உல்லாச வாழ்க்கைக்காக அதிகம் பலிகொடுத்தது பெண்களைதான்.  விளைவுகளை பற்றி சிந்திக்காமல் அடுத்தடுத்து கொலைகளை செய்துகொண்ட போன சோப்ராஜை விஷப்பாம்பு என்றும், சைக்கோ கொலைகாரன் என்றும்கூட பீதியோடு அழைத்தனர். அந்த அளவிற்கு சைக்கோதனம் குடிகொள்ளும் அளவிற்கு சோப்ராஜின் குழந்தை பருவமும் அமைந்தது.

சோப்ராஜ் செய்த கொலைகளின் பட்டியலைப்போல அவனது உண்மையான பெயரும் நீளமானதுதான். சார்லஸ் குருமுக் சோப்ராஜ் ஹாட்சன்ட் பாவ்னானி என்கிற பெயர்தான் அவருக்கு பெற்றோரால் சூட்டப்பட்டது. வியட்நாமின் சாய்கோன் நகரில் இந்தியாவைச் சேர்ந்த தந்தைக்கும், வியட்நாமைச் சேர்ந்த தாய்க்கும் 1944ம் ஆண்டு பிறந்தான் சோப்ராஜ். அவனது தாயும், தந்தையும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். அந்த வாழ்க்கையில் பிறந்த சோப்ராஜை தனது மகனாக ஏற்க தந்தை மறுத்தார். இந்நிலையில் பிரான்ஸை சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரை சோப்ராஜின் தாய் மணந்தார். அவருடன் பிரான்ஸ் சென்ற சோப்ராஜ் அங்கு ஒரு கட்டத்தில் வளர்ப்புத் தந்தையின் வெறுப்புக்கு ஆளானார். தங்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்ததும், சோப்ராஜை அலட்சியப்படுத்தினர் அவனது தாயும், வளர்ப்புத் தந்தையும். இதனால் பெற்றோரின் அன்பு கிடைக்காமல் தடுமாறிய சோப்ராஜ் குழந்தை பருவத்திலேயே தடம் மாறினான். தீய வழியில் சோப்ராஜின் மனம் திரும்பியது.

பிரான்சில் திருட்டு, வழிப்பறி என கைவரிசை காட்டத் தொடங்கிய சோப்ராஜ் தனது 19வது வயதில் 1963ம் ஆண்டு முதல்முறையாக சிறையில் காலடி எடுத்து வைத்தான். அங்கு அவன் திருந்தவில்லை மாறாக தனது குற்றசாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் கனவுகளைத்தான் கண்டுகொண்டிருந்தான். சிறை அலுவலர்களையே தனது பேச்சால் மயக்கி சிறையில் தனக்கான சிறப்பு வசதிகளை சோப்ராஜ் பெற்றான்.  உள்ளே சோப்ராஜ்க்கு பெலிக்ஸ் டி எக்ஸ்கோக்னே என்கிற வசதியான நண்பர்  கிடைத்தார். சிறையிலிருந்து வெளியே வந்ததும், அந்த நண்பரின் உதவியால் சுகபோகங்களை அனுபவித்த சோப்ராஜ், உல்லாச வாழ்க்கையை தொடர்ந்து அனுபவிக்க நிழல் உலக தாதாவாக மாறினான். தொடர் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த அந்த நேரத்திலும் சோப்ராஜ்க்கு காதல் பிறந்தது. சந்தால் காம்பேக்னேன் என்கிற அந்த பெண் சோப்ராஜின் நிழல் உலகத்தில் அவனது ராணியாக மாறினார்.

பிரான்சில் தன்னை சுற்றி போலீசாரின் தேடுதல் வேட்டை அதிகரிக்க தனது கர்ப்பிணி மனைவி சந்தால் காம்பேக்குடன் போலி பாஸ்போர்ட் மூலம் கிழக்கு ஐரோப்பியாவிற்கு தப்பினான். பின்னர் அங்கும் சுற்றுலா பயணிகளை பல்வேறு விதங்களில் ஏமாற்றி கொள்ளையடித்த சோப்ராஜ், பல்வேறு கெட்டப்புகளில் குடியுரிமை அதிகாரிகளையும், போலீசாரையும் ஏமாற்றிவிட்டு ஆசியாவிற்கு வந்தடைந்தான். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தனது குற்ற சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய சோப்ராஜ் 1970ம் ஆண்டு இந்தியாவிற்குள்ளும் நுழைந்தான்.  கார் திருட்டு, சுற்றுலா பயணிகளிடம் கொள்ளை,  வர்த்தக நிறுவனங்களில் கொள்ளை என தனது கைவரியை காண்பித்த சோப்ராஜ் 1973-ம் ஆண்டில் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலான அசோகாவில் உள்ள ஒரு நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். போலீசாரிடமிருந்து தப்பிப்பதில் கில்லாடியான சோப்ராஜ் இந்த முறையும் தனது கைவரியையை காண்பித்து தப்பித்தான். நோய் வாய்ப்பட்டது போல நடித்து தப்பிய அவன் மீண்டும் பிடிபட்டான். ஜாமீனில் வெளிவந்து ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு மனைவி, குழந்தையுடன் தப்பியோடிய சோப்ராஜ்,  அங்கு சுற்றுலாவாசிகளை ஏமாற்றி பிடிபட்டு, மறுபடியும் சுகவீனப்பட்டது போல நடித்தான். தான் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையின் காவலாளியை ஏமாற்றி தலைமறைவான சோப்ராஜ்,  தாய்லாந்து, நேபாளம், மலேசியா ஆப்கானிஸ்தான், துருக்கி, என ஆசிய நாடுகளில் கொலை, கொள்ளை என கொடூர குற்றங்களை புரிந்துவந்தான்.

டூரிஸ்ட் கைடு போல் அறிமுகப்படுத்திக்கொண்டு, இனிக்க இனிக்க பேசி பெண்களை மயக்கி, உடமைகளை அபகரித்துக்கொண்டு பின்னர் விஷம் கொடுத்து கொல்வதுதான் பிந்த பிகினி கில்லர் அதாவது நீச்சலுடை கொலைகாரனின் வாடிக்கை. பாலிவுட் ஹீரோவைப் போன்று வசீகர தோற்றத்துடன் தனக்கு இயற்கை அளித்த இளமையை நிழல் உலக குற்றத் தொழிலுக்கான மூலதனமாக்கினான் சோப்ராஜ். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒரு ரவுண்டு வந்து  தொடர் கொலைகளை புரிந்துவந்த சோப்ராஜ் தாய்லாந்தில் மட்மும் 14 பேரை தீர்த்துக்கட்டியதாகவும் அதில் பலர் பெண்கள் என்றும் கூறப்படுகிறது. இத்தனை கொலைகள் செய்திருந்தாலும் எதனையும் சோப்ராஜ் ஒப்புக்கொண்டதில்லை. தன்னுடன் இருந்தவர்கள் விபத்தில் இறந்தனர், அளவுக்கு மீறிய போதையில் இருந்ததால் உயிர் போனது என சமாளிப்பதுதான் சோப்ராஜின் வாடிக்கை. சைக்கோ கொலைகாரனாக பொதுமக்களை பீதியில் உறைய வைத்த சோப்ராஜ் மீண்டும் இந்தியா வந்தபோது அவனது ஆட்டம் முடிவுக்கு வந்தது. 1976ம் ஆண்டு பிடிபட்ட சோப்ராஜ் 1997ம் ஆண்டு வரை 21 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தான்.

சிறையிலிருந்து வெளிவந்த பின் 1997ம் ஆண்டு பிரான்ஸ் சென்ற சோப்ராஜின்  குற்றச்சரித்திரத்தை பற்றி தெரிந்துகொள்ள ஊடகங்கள் போட்டி போட்டன. அதனை பயன்படுத்தி பணம் சம்பாதித்து சொகுவாழ்க்கை வாழ்ந்தான். தனது நிழல் உலக வாழ்க்கையை படமாக்க முன்வந்த ஹாலிவுட் நிறுவனத்திடம் 124 கோடிக்கு பேரம்பேசிய சோப்ராஜ்க்கு நேபாளத்தில் மீண்டும் சிக்கல் காத்திருந்தது.  2003ம் ஆண்டு நேபாளம் சென்ற சோப்ராஜ்,  அங்கு மினரல் வாட்டர் தொழில் செய்து எஞ்சிய வாழ்க்கையை தொழில் அதிபர் என்கிற அடையாளத்தோடு கடத்திவிடலாம் என்று கணக்கு போட்டான். தனக்கு இன்னும் 19 ஆண்டு கால சிறை வாழ்க்கை காத்திருக்கிறது என அப்போது அவனுக்கு தோன்றியிருக்காது. காத்மண்டுவில் உள்ள சூதாட்ட கிளப் ஒன்றில் சோப்ராஜை பார்த்த ஊடகவியலாளர் ஒருவர் போலீசிடம் புகார் அளிக்க மீண்டும் சிறைக் கம்பிகளுக்கு பின் சென்றான் சோப்ராஜ். 19 ஆண்டுகள் கழித்து நேபாள உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் தற்போது விடுதலை கிடைத்திருக்கிறது. சோப்ராஜின் உடல் நலத்தை கருத்தில்கொண்டும், சிறையில் நன்னடத்தையுடன் நடந்துகொண்டதை கருத்தில் கொண்டும் சோப்ராஜை விடுதலை செய்வதாக நேபாள உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. தாதாவாக சிறைக்கு சென்று தற்போது தாத்தாவாக திரும்பி வந்திருக்கிறான் சோப்ராஜ். தனது வாழ்க்கையில் 40 ஆண்டுகளை சிறையில் கழித்த சோப்ராஜ் இனியாவது திருந்தி வாழ்வானா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  சோப்ராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து கடந்த 2105ம் ஆண்டு Main aur charles என்கிற ஒரு இந்திப்படமே தயாரிக்கப்பட்டது. The Serpent என்கிற பிரபல வெப் சீரியலும் சோப்ராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான். ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாது எப்படியெல்லாம் பிரபலமடையக்கூடாது என்பதற்கு சோப்ராஜின் வாழ்க்கை ஒரு பாடம்.

-எஸ்.இலட்சுமணன்

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இயக்குநர்கள் சங்கத் தேர்தல்: ஆர்.கே.செல்வமணி அணி வெற்றி

Halley Karthik

பால் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம் – அண்ணாமலை அறிவிப்பு

EZHILARASAN D

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது: திருச்சி சிவா

Niruban Chakkaaravarthi