ஓயாத ஓபிஎஸ்…இடைவிடா முயற்சிகள்…ஜூன் 23 முதல் ஜூலை 23 வரை நடந்தது என்ன?

பொதுக்குழு, எம்.எல்.ஏக்கள் ஆதரவு, வங்கிக் கணக்கு, கட்சி அலுவலகம் என  ஒவ்வொன்றாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்து, அவர் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்பதை அங்கீகரித்து வருகின்றன. அதே நேரம்…

பொதுக்குழு, எம்.எல்.ஏக்கள் ஆதரவு, வங்கிக் கணக்கு, கட்சி அலுவலகம் என  ஒவ்வொன்றாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்து, அவர் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்பதை அங்கீகரித்து வருகின்றன. அதே நேரம் ஒவ்வொன்றாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை விட்டு சென்று கொண்டிருந்தாலும், ஒன்று மட்டும் அவரைவிட்டு செல்லவேயில்லை. அதுதான் அவரது விடா முயற்சி.  எத்தனை தர்மசங்கடங்களை எதிர்கொண்டாலும் ஓயாத ஓபிஎஸ் ஆக அதிமுகவில் தனது உரிமையை நிலைநாட்ட  தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தாம்தான் என தற்போதும் உரிமை கொண்டாடி வரும் ஓபிஎஸ், அதனை நிலைநாட்ட கடந்த ஜூன் 23ந்தேதி முதல் செய்த முயற்சிகள் என்னவென்று பார்ப்போம்.

1) ஜூன் 23ந்தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஓபிஎஸ்க்கு எதிராக எழுந்த கண்டன கோஷங்களும், முழக்கங்களும், அவரது அரசியல் வாழ்க்கையில் அதுவரை சந்திக்காத தர்மசங்கடங்கள்.இதனால் பொதுக்குழுவைவிட்டு பாதியிலேயே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் வெளியேறினர்.எனினும் மனம் தளராத ஓபிஎஸ் அன்று இரவே டெல்லி பயணம் மேற்கொண்டார். அங்கு குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக களமிறங்கியிருந்த திரௌபதி முர்முவைக் சந்தித்து அதிமுக சார்பில் அவருக்கு ஆதரவைத் தெரிவித்தார். இதன் மூலம் அதிமுக ஒருகிணைப்பாளர் என்கிற முறையில் டெல்லியில் தனது அடையாளத்தை நிலை நாட்ட ஓபிஎஸ் முயன்றதாகக் கூறப்பட்டது.

2) ஜூன் 23ந்தேதி அதிமுக பொதுக் குழுவில் நிகழ்ந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தில்  எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீது புகார் அளித்தார். ஒருங்கிணைப்பாளரான தம்மை கலந்து ஆலோசிக்காமல் ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தார்.

3) ஜூன் 23ந்தேதிக்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் ஆதரவாளர்கள் கூறிவந்த நிலையில் அந்த பதவிகள் இன்னும் காலாவதியாகவில்லை என்பதை உணர்த்துவதுபோல் எடப்பாடி பழனிசாமிக்கே கடிதம் எழுதினார். உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் படிவத்தில் கையெழுத்திடுவது  தொடர்பாக, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கடிதத்திற்கு தன்னை அதிமுக தலைமை நிலையச் செயலாளராக மட்டுமே அடையாளப்படுத்திக்கொண்டு எடப்பாடி பழனிசாமி எழுதிய பதில் கடிதம் அதைவிட பரபரப்பை ஏற்படுத்தியது.

4) ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை இபிஎஸ் தரப்பினர் தீவிரமாக மேற்கொண்டபோது, அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதத்தை மறுத்து வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு, மொத்தமாக உள்கட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை மட்டும் எப்படி காலியானதாக அறிவிக்க முடியும் என கேள்வி எழுப்பியது.  மாநிலங்களவை வேட்பாளர் தேர்வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணப்பாளர் பங்களிப்பு முக்கியமாக இருந்ததாகவும் ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

5) ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவை கூட்ட காலை  9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து 9.15 மணிக்கு பொதுக்குழுவை கூட்டினார் இபிஎஸ். ஒரு பக்கம் பொதுக்குழு நிகழ்ச்சிகள் சென்னை வானகரத்தில் களைகட்டிக்கொண்டிருக்க அதே நேரம் தனது ஆதரவாளர்களுடன்  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு சென்றார் ஓபிஎஸ். இதனால் ஊடகங்களின் கவனம் அங்கும் திசை திரும்பியது. அதே நேரம் அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரிடையே வெடித்த மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

6) கலவரம் எதிரொலியாக அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்த நிலையில், அந்த சீலை அகற்றி அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிடக்கோரி அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் என்கிற முறையில் இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரம் அதிமுக தலைமை அலுவலகம் கட்சியின்  ஒருங்கிணைப்பாளரான தனது கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என உரிமை கோரி ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

7)  ஜூலை 11ந்தேதி பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் மற்றும் நீக்கங்கள் செல்லாது என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார் ஓபிஎஸ். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தாம்தான் என அந்த முறையீட்டில் அழுத்தமாக குறிப்பிட்டிருந்தார்

9) முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் மக்களவையின் எம்.பியுமான ரவீந்திரநாத் மற்றும் ஓ.பன்னீர் செவ்வத்தின் மற்றொரு மகனான ஜெயபிரதீப் ஆகியோர் கடந்த 14ந்தேதி அதிமுகவிலிருந்து அக்கட்சியின் இடைக்காலப்பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டனர். அவர்கள் தவிர ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மேலும் 16 பேரையும் அன்று கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அன்று இரவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்கிற பெயரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமியையையே கட்சியைவிட்டு நீக்நுகுவதாகக் கூறி அதிரடிகாட்டினார்.

10) திமுகவுடன் நெருக்கம் காட்டுவதாக ஓபிஎஸ் மீது இபிஎஸ் அணியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மின் கட்டண உயர்வு விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

11) அதிமுகவின் பொருளாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் கட்சியின் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என ஓபிஎஸ் கேட்டுக்கொண்டதை நிராகரித்த வங்கிகள், திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக வங்கி கணக்குகளை கையாளுவதை ஏற்றன. எனினும் மனம் தளராத ஓ.பன்னீர்செல்வம், இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணைய சட்டப்படி தற்போதும் தாம்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என தெரிவித்துள்ளார். வங்கி கணக்குகள் தவறாக கையாளப்படுவதை தவிர்க்க அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனருக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எமுதியுள்ளார்.

12) ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும், இனி அவரை அதிமுகவின் உறுப்பினராக கருத வேண்டாம் எனவும் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையின் இதனை மறுத்து மக்களவை சபாநாயகருக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் எழுதியுள்ள கடிதத்தில், ரவீந்திரநாத் குறித்து எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை ஏற்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.  ரவீந்திரநாத்  அதிமுக எம்.பியாகவே தொடர்வதாக கூறியுள்ள ஓபிஎஸ், அதிமுக பொதுக்குழு தொடர்பாக தாம் தொடர்ந்த வழக்குகள் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பொதுக்குழு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தாம் முறையிட்டுள்ளதையும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமது கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.

-எஸ்.இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.