இவர்தான் மலாலாவின் கணவர் அஸர் மாலிக் !

பெண் குழந்தைகளின் கல்வி உரிமை போராளியான மலாலாவை திருமணம் செய்துள்ள அஸர் மாலிக் யார் என்பது தெரிய வந்துள்ளது. பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடியவர், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மிங்கோரா என்ற…

பெண் குழந்தைகளின் கல்வி உரிமை போராளியான மலாலாவை திருமணம் செய்துள்ள அஸர் மாலிக் யார் என்பது தெரிய வந்துள்ளது.

பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடியவர், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மிங்கோரா என்ற கிராமத்தைச் சேர்ந்த மலாலா (Malala Yousafzai). தலிபான்களின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்கான அடிப்படை உரிமையை ஆதரித்ததற்காக, 2012ஆம் ஆண்டு தலிபான்களால் சுடப்பட்டார் மலாலா. இந்த சம்பவம் உலக அளவில் அப்போது பரபரப்பானது. தலையில் பலத்த காயமடைந்து இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மலாலா, தனது குடும்பத்தினருடன் அங்கேயே வசித்து வருகிறார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள மலாலா, இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள வீட்டில் தனக்கு திருமணம் நடைபெற்றதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அஸர் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், திருமண புகைப்படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் பதிவில், என் வாழ்வில் இது பொன்னான நாள். அஸரும் நானும் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் குடும்பத்துடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் திருமண விழாவைக் கொண்டாடினோம். உங்கள் ஆசீர்வாதத்தை அனுப்புங்கள் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், மலாலா திருமணம் செய்துள்ள அஸர் மாலிக் யார் என்பது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் லாகூர் மாவட்டத்தை சேர்ந்த அஸர், அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இருவரும் 2019 ஆம் ஆண்டில் இருந்து ஒருவரையொருவர் அறிந்துள்ளதாகத் தெரிகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பர்மிங்காமில் விளையாடிய போது எடுக்கப்பட்ட செல்ஃபியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அஸர். அதில் மலாலாவும் இருக்கிறார். அந்த புகைப்படத்தை அவருக்கும் அஸர் டேக் செய்துள்ளார். பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ள அஸர் மாலிக், நாடகங்களை உருவாக்கும் டிராமாலைன் என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.