சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “நேற்று (28-09-26) வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 19.30 மணிக்கும் 21.30 மணிக்கும் இடையே கியாக்டோவிற்கு (Kyaikto) கிழக்கே மியான்மர் அருகே கரையைக் கடந்தது. சுமார் 1.5 கிமீ உயரம் வரை வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலங்கானாவில் இருந்து மன்னார் வளைகுடா வரை, ராயலசீமா மற்றும் வடக்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, கரூர், ராணிப்பேட்டை, திருவாரூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நாமக்கல், பெரம்பலூர், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி திருப்பூர், வேலூர், தென்காசி ஆகிய 22 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




