இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர், கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், செங்கல்பட்டு, சென்னை, கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாக்குமரி, ராணிப்பேட்டைம், தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.