இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரம் வரை கடலோர கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகளிலும், மத்தியமேற்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதிகளிலும், கேரளா – கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், மேலும் தென்மேற்கு, மத்தியமேற்கு, மத்தியகிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் முன்னேறியுள்ளது.

இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.