சுமார் 5.8 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் மத்தியகிழக்கு- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று திருச்சிராப்பள்ளி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், ஆகிய 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







