சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 4.5 கிமீ உயரத்தில் வடக்கு உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 கிமீ உயரத்தில் மராத்வாடாயிலிருந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை, உள் கர்நாடகா மற்றும் கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




