சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் மேற்கு ராஜஸ்தான் முதல் முதல் குமரிக்கடல் வரை, கிழக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், விதர்பா, தெலங்கானா, ராயலசீமா மற்றும் உள்தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலை பகுதிகள் மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கரூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







