இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “சுமார் 4.5 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை வட தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரம் வரை கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. சுமார் 5.8 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, கேரளா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், நாமக்கல், விழுப்புரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.