மாண்டஸ் புயல் தற்போது எங்கே உள்ளது என்பது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலை பார்ப்போம்
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் படிபடியாக நகர்ந்து தமிழ்நாட்டின் வடக்கு கடலோர பகுதியை நெருங்கி வருகிறது. இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை இந்த புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இரவு 7.30 மணி நிலவரப்படி மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கே 70 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 110 கி.மீ தென்- தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு – நாளை அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்ததும் நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நண்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாண்டஸ் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65லிருந்து 75 கி.மீ வரை பலத்த காற்று வீசும் என்றும் அதிகபட்சமாக மணிக்கு 85 கி.மீ வேகம் வரை பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.