இந்தியா முன்னேறும் போது உலகம் முழுவதும் வளர்ச்சி அடைவதாக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி, 23-ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நேற்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா தின கொண்டாட்டத்தில் தலைமை தாங்கி பங்கேற்றார். பின்னர், வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான தளத்திற்கு வந்தடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 2வது நாளான இன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
வெள்ளை மாளிகை வந்த பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் பைடன், அவரது மனைவி ஜில் டைபன் ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடிக்கு அதிபர் பைடன் பழமையான புத்தகம் மற்றும் கோட்டக் கேமரா, ராபர்ட் ஃப்ரோஸ்டின் எழுதிய கவிதையின் முதல் பதிப்பு உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கினார். பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் இணைந்து வழங்கிய அரசு விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இதனையடுத்து அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்திய பிரதமர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2வது முறையாக உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். இதற்காக இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கூறினார். நவீன இந்தியாவில் பெண்கள் முன்னேற்றப் பாதையில் செல்வதாகவும், பழங்குடிப் பின்னணியில் இருந்து வந்த ஒரு பெண் இந்தியாவின் உயர்ந்த பதவியை வகித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் 2,500 அரசியல் கட்சிகள் உள்ளன, பல்வேறு மாநிலங்களில் 20 வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்கின்றன, 22 அதிகாரப்பூர்வ மொழிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கிளைமொழிகள் உள்ளன, இருப்பினும் நாங்கள் ஒரே குரலில் பேசுகிறோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். உலகம் ஒரே குடும்பம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்தியா G20 உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்குவதாகவும். அவர் தெரிவித்தார்.
தாம் பிரதமராக முதல் முறையாக அமெரிக்கா வந்த போது இந்தியா, உலகின் 10வது பொருளாதார நாடாக இருந்ததாகவும், இன்று 5வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது என்றும் கூறினார். இந்தியா வளரும் போது உலகம் முழுவதும் வளரும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமர் மோடி உரை நிகழ்த்திய போது அமெரிக்க எம்.பி.கள் 15 முறை எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றனர். பின்னர் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கியதுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.







