குஜ்ரால், தேவகவுடா பிரதமர்கள் ஆனபோது, இபிஎஸ் ஏன் ஆகக் கூடாது? – ராஜேந்திர பாலாஜி கேள்வி

I.K.குஜ்ரால், தேவகவுடா ஆகியோர் பிரதமர் ஆன போது, அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமர் ஆகக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.  விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுகவின்…

I.K.குஜ்ரால், தேவகவுடா ஆகியோர் பிரதமர் ஆன போது, அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமர் ஆகக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுகவின் 52வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன்,  அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “அதிமுக 52வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.  திமுகவிற்கு 75 வயது. காங்கிரஸுக்கு 100 நூறு வயது கடந்து விட்டது.  அவர்கள் ரிட்டயர்ட் ஆகிவிட்டனர்.  ஏழை எளிய மக்களுக்காக சிறப்பான ஆட்சியை தந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.  கல்வியில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக கொண்டு வந்தவர் அவர்.  அதிமுக என்பது மனிதன் ஆரம்பித்த கட்சி கிடையாது.  இது எம்ஜிஆர் என்ற புனிதன் ஆரம்பித்த கட்சி. ஜெயலலிதா ஒரு தெய்வமகள்.  அனைத்து சமூகத்தினரையும் மதித்தவர்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு விலக்கிற்கு என்றார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் 2000 அம்மா மினி கிளினிக்கை மூடி விட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்காகவே திமுக நீட் தேர்வு ரத்துக்கான கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது.  காங்கிரஸ் தலைமையில் உள்ள கூட்டணி, இந்தியா கூட்டணி கிடையாது. அது இத்தாலி கூட்டணி.  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அமையக்கூடிய கூட்டணி, தமிழ்நாடு கூட்டணி.

இன்றைய திமுக அரசு தொடர்ந்து பட்டாசு தொழிலாளர்களை வஞ்சிக்கிறது.  இதே நிலை நீடித்தால் ஒட்டுமொத்த பட்டாசு தொழிலையும் ஒழிக்க நினைத்தால், சிவகாசி பட்டாசு தொழில் பாதுகாப்பு பேரவை என்று ஒரு மாபெரும் அமைப்பை எனது தலைமையில் ஏற்படுத்தி, மிகப்பெரிய அளவில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்.  பட்டாசு தொழில் இல்லை என்றால், இந்த தொழிலை நம்பி உள்ள ஒரு கோடி பேர் வேலை இழக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

இதையும் படியுங்கள் : மனைவியை வேலைக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக வரக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது.  இதை நான் பேசியதற்கு சிலர் நான் ஜோக் அடிக்கிறேன் என்று கூறினார்கள்.  ஏன் இதற்கு முன்னர் I.K.குஜ்ரால் வரவில்லையா?, தேவகவுடா வரவில்லையா?. 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் ஏன் பிரதமராக வரக்கூடாது?” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.