தமிழ் நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10 ஆம் தேதி பதவியேற்றார். அப்போது பதவியேற்பு விழா மேடையில் பேசிய விஜய், ” அரசு கஜானாவை முந்தைய அரசு 10 லட்சம் கோடிக்கு மேல கடனை வாங்கி வைத்துவிட்டு போயிருக்கிறார்கள் என்றும் கஜானாவை காலி செய்து விட்டு போயுள்ளதாகவும் விமர்சித்து இருந்தார். மேலும் தமிழ் நாட்டின் நிதி நிலமையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென நினைப்பதாகவும், மக்கள் தனக்குக் கொஞ்சம் அவகாசம் தர வேண்டும் என்றும் அவர் பேசியிருந்தார்.
முதலமைச்சர் விஜயின் இந்த கருத்திற்கு மறுப்பு தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் தவெக அறிவித்த மக்கள் நல திட்டங்களுக்கான நிதி குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







