தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் காங்கிரஸ்…. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை அரவணைக்கும் பாஜக….. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி போட்டியா……? விரிவாக பார்க்கலாம்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்ரப்பிரதேச மாநிலம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய 2 தொகுதிகளில் பிரதமர் நரேந்திரமோடி போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றியும் பெற்றார். பின்னர், வதோதரா தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலிலும் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளார். இதில் ஒன்று வாரணாசி என்றாலும் மற்றொன்று எது? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக இலக்கு – காங்கிரஸ் எதிர் வியூகம்
வரும் மக்களவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வென்று, மூன்றாவது முறையாக ஆட்சியமைப்போம் என்கிறது பாஜக. அதற்கு வாய்ப்பில்லை, 100 இடங்களுக்குள் பாஜகவின் வெற்றியை சுருக்குவோம் என்கிறது காங்கிரஸ். இதன்படி, பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் இருக்க அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைக்க காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. பீகாரில் கூடி ஆலோசனை நடத்திய எதிர்க்கட்சிகள், அடுத்து பெங்களூவில் கூட உள்ளனர். எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைவால் பாஜகவிற்கு முன்பை விட இடங்கள் குறையும். குறிப்பாக வட மாநிலங்களில் பாஜகவிற்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காது என்றும் சொல்லப்படுகிறது.
கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு
அதேநேரத்தில், ஏற்கனவே கூட்டணியில் இருந்து, தற்போது சற்று விலகி நிற்கும் கட்சிகளை மீண்டும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சித்து வருகிறது. இதன்படி, பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளம், மகாராஷ்ட்ராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் பிரிவுகள், பீகாரில் ஜிதன்ராம் மாஞ்சி, ராம் விலாஸ் பாஸ்வான், ஆந்திராவில் தெலங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடு, தெலங்கானாவில் ஒய்.எஸ்/ஆர் ஷ்ர்மிளா, கர்நாடகாவில் எச்.டி.குமாரசாமி உள்ளிட்டோரிடம் கூட்டணிக்கான பேச்சுகளும் ஒருபக்கம் நடைபெற்று வருதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கூட்டணியில் தொடரும் கட்சிகளுடன், மேற்கண்ட கட்சிகளும் ஜூலை 18ம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன என்கிறார்கள்.
மேலும், பாஜகவிற்கு வாக்கு வங்கி குறைவாக உள்ள மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் கூடுதல் இடங்களுக்கு இலக்கு வைத்துள்ளனர். குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து 50 இடங்களுக்கு குறையாமல் பெற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மோடி போட்டி?
இத்தகைய சூழலில்தான் பாஜக தென் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தென்னிந்தியாவில் பிரதமர் மோடி போட்டியிட்டால், உத்வேகமாக இருக்கும் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் காசி(வாரணாசி) போல் தென்னிந்தியாவில் சிறந்த புண்ணிய தலமான ராமேஸ்வரத்தில், அதாவது ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை தமிழ்நாட்டுக்கு வந்த போது, ’’அடுத்த பிரதமர் தமிழ்நாட்டில் இருந்து வருவார் ’’என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாக வந்த தகவல். பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது காரணத்தோடுதான் என்கிறார்கள்.
ராமநாதபுரத்தில் மோடி அரசியல் கணக்கு
தமிழ்நாட்டில், ராமநாதபுரத்தில் பிரதமர் போட்டியிடும் திட்டத்திற்கு பின்னால், பல்வேறு அரசியல் கணக்குகளும் உள்ளன. ராமநாதபுரத்தில் போட்டியிடுவதன் மூலம் தமிழ்நாட்டில் கட்சியை வேகமாக வளர்ப்பது, இஸ்லாமியர்கள் அதிகமுள்ள தொகுதியில், வெற்றி பெற்று கட்சியின் இமேஜை மாற்றுவது. ராமர் கோயிலுடன் தொடர்புடைய ராமர் பாலம், காசி போல் தென்னிந்தியாவில் இந்துக்களின் புண்ணிய தலத்தில் போட்டியிட்டும் இந்துக்களின் வாக்குகளை ஒருமுனைப்படுத்துவது. தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களில் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறுவது உள்ளிட்ட வியூகங்களையும் காரணங்களையும் அடுக்குகிறார்கள்.
இந்த பின்னணியில்தான், இம்மாத இறுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் பயணத்தை அமித் ஷா தொடங்கி வைக்க இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
அடிக்கடி திருக்குறளை மேற்கோள்கள் காட்டி பேசுவது…. காசி தமிழ் சங்கமம், நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் செங்கோல்…. வரிசையில் புண்ணிய தலமான ராமேஸ்வரத்தை மையப்படுத்தி வரும் பாஜகவின் வீயூகம் வெல்லுமா…? மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்குமா பாஜக? தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா தாமரை? பொருத்திருந்து பார்க்கலாம்….
இது தொடர்பான சொல் தெரிந்து சொல் பகுதியின் காணொலி….
– ஜோ.மகேஸ்வரன்







