தக்காளி விலை உயர்வால் பல்வேறு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் முத்துராஜா தெரிவித்துள்ளார்.
சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி ஆகும். இந்த காய்கறிகள் இல்லாமல் சமையல் செய்வதே மிக மிக கடினம். தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை ஏறினால் பொதுமக்கள் மற்றும் ஓட்டல் தொழிலில் ஈடுபடுவோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது 130 ரூபாயை தொட்டுள்ளது. தக்காளி விலை கிலோ ரூ.100க்கு மேல் உயர்ந்து விட்டதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், சென்னையில் 82 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி இன்று முதல் சென்னையில் உள்ள 82 நியாய விலைக் கடைகளிலும் ரூ.60கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தக்காளி விலை மேலும் 10 நாட்களுக்கு உயர்ந்து காணப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் குறித்து மதுரையைச் சேர்ந்த பொருளாதார பேராசிரியர் முத்துராஜா, நமது முதன்மை செய்தியாளர் ஹரிகிருஷ்ணனுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தக்காளி இந்தியாவின் முக்கிய உணவு பொருள் ஆகும். இதன் விலையேற்றத்தில் நமது பொருளாதாரமும் அடங்கியுள்ளது. தக்காளி விலையை கட்டுப்படுத்த 6 முறைகளை கடைபிடிக்க வேண்டும். அதில் முக்கியமானது வணிகர்கள் தக்காளி பதுக்கலை தடுக்க வேண்டும். தக்காளியை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற வேண்டும். தக்காளி பயிருக்கு மானியம் கொடுக்க வேண்டும். தக்காளியை சேமிக்க கிடங்குகள் அமைக்க வேண்டும். பொதுமக்கள் தக்காளிக்கு மாற்று செய்ய வேண்டும். தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். புதிய தொழில்நுட்பத்துடன் தக்காளி பயிரிட வேண்டும். தக்காளி விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு பொருளாதார பேராசிரியர் முத்துராஜா தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா









