அரிக் கொம்பன் யானையின் தற்போதைய நிலை குறித்து வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என குமரி மாவட்ட ஆட்சியரிடம் கேரள மாநில விலங்குகள் நல ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அரிக்கொம்பன் யானை நலம் விரும்பிகள்
அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
” அரிக்கொம்பன் யானை நெல்லை மாவட்ட வன பகுதியில் விடப்பட்டு, பின்னர் கோதையாறு பகுதியில் உலா வருவதாக வனத்துறையினர் புகைப்படங்கள் வெளியிட்டிருந்தனர். கடந்த 20 தினங்களாக யானையின் நிலை என்ன? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஏற்கனவே அந்த யானைக்கு காலில் அடிபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் , தற்போது உணவு சாப்பிடுகிறதா? எந்த பகுதியில் உள்ளது என்பது போன்ற விவரங்களை வனத்துறையினர் உடனடியாக பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். யானையின் உடல் நலம் குறித்த விவரங்களை கேரள மாநிலத்தில் 5 லட்சம் பேர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே தமிழ்நாடு அரசு யானையின் நிலை குறித்து உடனடியாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என மனுவில் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.






