பொது சிவில் சட்டம் குறித்து பேச்சு எழும்போதெல்லாம் பெரும் விவாதப்பொருளாக மாறுகிறது. அப்படி என்ன சொல்கிறது இந்த பொதுசிவில் சட்டம், விளக்கமாக பார்க்கலாம்.
பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொது உரிமையியல் சட்டங்களை குறிக்கிறது.
மத்தியில் பாஜக தலைமையிலான அரசு 2014-ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றி 2 ஆண்டுகள் கடந்த பின், 2016-ஆம் ஆண்டு 21-ஆவது சட்ட ஆணையம் நிறுவப்பட்டது. பாஜக அரசால் அமைக்கப்பட்ட இந்த ஆணையம், பொது சிவில் சட்டத்தின் சாதக பாதகங்களை 2 வருடங்கள் ஆய்வு செய்து 152 பக்க அறிக்கையை 2018 ஆகஸ்டில் வெளியிட்டது. அந்த அறிக்கையில் பொது சிவில் சட்டம் அவசியமில்லை, தற்போதைய சூழலுக்கு உகந்ததாகவும் இருக்காது என கூறப்பட்டது. அதோடு, இந்து, கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள், பார்சியர்கள் என அனைத்து சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கும் தனிப்பட்ட பாதிப்புகள் அதிகமாக உள்ளது. அவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பாஜக அரசால் அமைக்கப்பட்ட 21-ஆம் சட்ட ஆணையத்தின் இந்த பரிந்துரைகளை 5 வருடமாகியும் கவனத்தில் கொள்ளாமல் கிடப்பில் போட்டுவிட்டு, பொது சிவில் சட்டத்தால் மட்டும் இஸ்லாமிய பெண்களை காக்க வேண்டும் என மத்திய அரசு சொல்லி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணா்கள், பாா்சி இனத்தவர் உள்ளிட்டோர் சிறுபான்மையினராகவும் உள்ளனர். திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிா்வு உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் இந்துக்கள், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்குத் தனித்தனியாக உள்ளன.
குறிப்பாக, நாட்டில் இந்துக்களுக்குத் தனியாகக் குடும்பவியல் சட்டம் இருக்கிறது. இந்துச் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்குத் திருமண வாரிசு, சடங்கு எனப் பல்வேறு அம்சங்களில் பெரியளவில் முரண்பாடு உள்ளது. மலைவாழ் மக்களின் பழக்க-வழக்கம் என 400-க்கும் மேற்பட்ட இந்துத் தனியார் சட்டங்கள் உள்ளன.
சீக்கியர்களின் மத உணர்வுகளை மதிக்கும் வகையில், அவர்களுக்குச் சிறப்புச் சலுகையாக ‘ஹெல்மெட்’ அணியாமல், தலையில் ‘டர்பன்’ கட்டிக்கொண்டு, இருசக்கர வாகனம் ஓட்டவும், கத்தி வைத்துக்கொள்வதற்கும் அனுமதி உள்ளது.
இதே போன்று, ‘ஷரியத்’ சட்டத்தைப் பின்பற்றுவது முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் ஒன்று. இந்தியாவில் இது ‘முஸ்லிம் தனிநபர் சட்டம்’ என்கிற பெயரில் 1937இல் இயற்றப்பட்டது. முஸ்லிம் தனிநபர்கள், அவர்கள் குடும்பம் பற்றிய அக்கறை, முஸ்லிம் சமூகம் சார்ந்த திருமணம், மணமுறிவு, வாரிசு, வக்பு உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களை கையாள்வது ஆகிய நான்கு விவகாரங்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும்.
இஸ்லாமியர் மத வழக்கப்படி திருமணம் செய்துகொண்டாலும், கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம் 2009இன்படி, மூன்று மாதத்திற்குள்ளாகத் திருமணத்தைப் பதிவுசெய்தாக வேண்டும். வயது சரிபார்க்கப்பட்டே திருமணப் பதிவு நடக்கிறது. மணமுறிவு என்றால் ஜமாத், ஹாஜி அறிவுறுத்தலை ஏற்று, கால அவகாசம், இடைவெளி – சமரச முயற்சி போன்றவை முறையாக நடைபெற்றனவா என்பதை நீதிமன்றம் உறுதிசெய்த பின்பே, திருமணப் பதிவை ரத்துசெய்து மணமுறிவுக்கு அனுமதிக்கப்படுகிறது.இதனால் ‘ஜமாத்’, ‘ஹாஜி’க்களுக்கு இருந்த அதிகாரம் மணமுறிவு விஷயத்தில் குறைக்கப்பட்டுவிட்டது. இதில் நீதிமன்றமே உச்சபட்ச அதிகார அமைப்பாக உள்ளது.
இவ்வாறு ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களின் மத நம்பிக்கைகளை பாதிக்காதவாறு தனித்தனி சட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன.
இதனை எதிர்க்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, சட்டங்கள் தனித்தனியாக இருப்பது நிா்வாகத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துவதாக கூறி வருகிறது. மக்களிடையே ஒற்றுமை உணா்வை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் அனைத்து சமூக மக்களுக்கும் பொதுவான சட்டங்களை வகுக்க அரசுகள் முயற்சிக்க வேண்டுமென அரசமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவு பரிந்துரைக்கிறது. அதன் அடிப்படையில், நாட்டில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.
அரசியல் சாசனத்தின் 44 வது பிரிவு பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறது என்பது சரிதான். அதில் “நாட்டிலுள்ள எல்லாக் குடிமக்களுக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டம் உருவாக்கிட முயல வேண்டும்” என்கிறது. அது ‘கொள்கை விளக்கம்’ என்ற தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளதே தவிர இது கட்டாயம் என்று சொல்லப்படவில்லை. இது ஒரு ஆலோசனை மட்டுமே.
சட்டப்பிரிவில் “கொள்கை விளக்கம்” என்ற தலைப்பு மற்ற தலைப்புகளிலிருந்து வேறுபட்டது. மற்ற தலைப்புகளில் உள்ளதை செயல்படுத்தாவிட்டால் நீதிமன்றம் தலையிடலாம். ஆனால் சட்டப்பிரிவில் “கொள்கை விளக்கம்” என்ற தலைப்பில் கூறப்படுபவற்றை செயல்படுத்துமாறு நீதிமன்றம் கட்டளையிட முடியாது. இந்த பகுதியில் விதிக்கப்பட்டவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது என்று கொள்கை விளக்கத்தின் 37 வது சட்டப்பிரிவு கூறுகிறது.
இந்நிலையில், கோவா, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், பொது சிவில் சட்டமானது சிறுபான்மையினரின் உரிமைகளை பாதிக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கூறி வருகின்றன. அதை பாஜக நிராகரித்து வருகிறது.
இந்த நிலையில், பொது சிவில் சட்டம் அவசியமானது என பிரதமா் மோடி கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பொது சிவில் சட்ட விவகாரத்தை பா.ஜ.க. முக்கிய ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனா். அதோடு, எதிர்கட்சியினரும் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.








