தட்டி கொடுப்பவர்கள் மிகவும் குறைவாக தான் உள்ளார்கள். ஆனால், தட்டி
விடுபவர்கள் அதிகமாக இருப்பதாக நடிகர் சிலம்பரசன் தெரிவித்தார்.
வெந்து தணிந்தது காடு படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் சிலம்பரசன் பேசியதாவது:
யாரையும் உடலை வைத்து விமர்சிக்க வேண்டாம். இது ஒரு புதிய முயற்சி, அதனால் இந்த படம் வெற்றி பெறுமா என யோசித்தேன். ஆனால் இன்று இந்த படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
ரொம்ப கடினப்பட்டு இந்தப் படத்தில் நடித்தேன். வித்தியாசமான கடினத்தை இந்த
படத்தில் நான் உணர்ந்தேன். அது சரியாக பார்வையாளர்களுக்குத் தெரியவில்லை.
படப்பிடிப்பு காட்சிகளை வெளியிட்டால் அது தெரிய வரும். இந்த படத்திற்கு மிக பெரிய அன்பையும் ஆதரவையும் மக்கள் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி.
எனக்கு மல்லிப்பூ பாடல் தான் அதிகமாக பிடித்திருந்தது. இந்த பாடல் மிகப்பெரிய
வெற்றி பெறும் என கவுதமிடம் சொன்னேன். அதேபோல், திரையரங்குகளில்
ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த படம் மிகப்பெரிய வெளியீட்டை கண்டுள்ளது என்றால் அதற்கு காரணம் ரெட்
ஜெயன்ட் மூவிஸும் உதயநிதி ஸ்டாலின் அண்ணாவும் தான். இரண்டாம் பாகம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஜனரஞ்சமாக இருக்க வேண்டும்.








