கத்தாரில் நடந்தது என்ன..? மீட்கப்படுவார்களா இந்திய முன்னாள் அதிகாரிகள்..?

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8பேருக்கு இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கூறி மரண தண்டனை விதித்துள்ளது கத்தார் நீதிமன்றம். இந்திய கடற்படை அதிகாரிகள் மீட்கப்படுவார்களா..? அலசுகிறது இந்த தொகுப்பு. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும்…

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8பேருக்கு இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கூறி மரண தண்டனை விதித்துள்ளது கத்தார் நீதிமன்றம். இந்திய கடற்படை அதிகாரிகள் மீட்கப்படுவார்களா..? அலசுகிறது இந்த தொகுப்பு.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுடன் தொடர்புபடுத்தி இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேரை கைது செய்து தூக்கு தண்டனை விதித்துள்ளது கத்தார் நீதிமன்றம்…யார் இவர்கள்? எதற்காக கத்தார் சென்றார்கள்? விரிவாக காணலாம்.

கத்தார் நாட்டில் தாஹ்ரா குளோபல் டெக்னாலஜீஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் கடற்படை மற்றும் ஆயுதபடைக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிறுவனம் ராயல் ஓமானி விமானப் படையில் இருந்த முன்னாள் வீரருக்குச் சொந்தமானதாகும்.

இந்த நிறுவனத்தில் தான் இந்திய கடற்படையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற 3 கேப்டன்கள், 4 கமாண்டர்கள், ஒரு மாலுமி ஆகிய 8 அதிகாரிகள் பணியாற்றி வந்தனர். இத்தாலிய ஹைடெக் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ரேடாரை தவிர்க்கும் படியான ஒரு நீர்முழ்கி கப்பலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருந்தது அந்த நிறுவனம்.

அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இந்திய அதிகாரிகள் 8 பேரையும், 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி கத்தார் உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தோஹோ-வில் உள்ள சிறைச்சாலையில் தனித்தனியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சௌரப் வசிஷ்ட், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகலா, கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் சைலர் ரேகேஷ் கோபாகுமார் ஆகிய 8 பேரும் கத்தார் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான முக்கியமான தகவல்களை, இஸ்ரேலுக்கு வழங்கியதாகவும் அதற்கான மின்னனு ஆதாரங்கள் இருப்பதாகவும், கத்தார் உளவுத்துறை தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை என்கிறார்கள்.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேர் மீதும் 2023ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு காத்தார் நாட்டு சட்டப்படி விசாரணை செய்யப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் ஜாமின் பெற பல நடவடிக்கைகள் எடுத்த போதிலும், அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில் தான் 8 பேருக்கும் மரண தண்டனையை விதிப்பதாக கத்தார் நீதிமன்றம் அக்டோபர் 26ம் தேதி அறிவித்தது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ரகசியங்களை பகிர்ந்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

கத்தார் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், தங்களது குடிமக்களை மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இது குறித்து அதிக முக்கியதுவம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து சட்ட வல்லுநர்களுடனும் ஆலோசனை செய்து, சட்ட வழிகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக கத்தார் அரசிடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.