ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு எனப்பாடல் தந்த கவியரசு கண்ணதாசன், பாட்டெழுத வந்த வாலிக்கு, 3 கட்டளைகளை கூறினார்… அந்த 3 கட்டளைகள் என்னென்ன?…. வாருங்கள் பார்க்கலாம்…
ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல், காலத்தால் அழியாத பாடல் மட்டுமில்லை… ஆண்டு பல கடந்தும் நாள்தோறும் மனித வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய கருத்துகளை வலியுறுத்தி வருகிறது. மனித வாழ்வில் இன்ப, துன்பங்களை சரிசமமாக பாவித்து மனதை பக்குவப்படுத்தும் வகையிலான தத்துவ வரிகளை தந்திருப்பார் கண்ணதாசன். தனது வரிகளில் குறிப்பிட்டதைப்போல ஆசை கொள்வதை மறுத்தார் கண்ணதாசன்.
அதே நேரத்தில் திரையுலகில் வாய்ப்பு கிடைத்த வாலி, கண்ணதாசனுக்கு இணையாக பிரபலமாகி வந்தார். சாரதா என்ற திரைப்படத்தின் வெற்றி தனக்கான வெற்றி என அதன் இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் எண்ண, பாடல் எழுதிய தன்னால்தான் திரைப்படம் வெற்றி பெற்றதாக கண்ணதாசன் கருத, இருவரிடையே ஆரோக்கியமான போட்டி எழுந்தது. தனது அடுத்த திரைப்படத்திற்கு கண்ணதாசனுக்கு பதில் வாலிக்கு வாய்ப்பு தந்தார் கோபாலகிருஷ்ணன். அவர் எண்ணியதை போல கற்பகம் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் வாலி எழுதினார்.
தனக்கு இணையாக கவிஞர் வாலி வளர்ந்து வரும் நிலையில் தனது பாடல் வரிகளுக்கேற்ப, வாலியின் வளர்ச்சி மீது கண்ணதாசன் பொறாமை கொள்ளவில்லை… மாறாக வாலி மீது அன்பு பாராட்டினார். வாலி எழுதிய ஒருசில பாடல்களை கேட்டு அவ்வப்போது கண்ணதாசனும் மயங்கிப்போனதாக கூறுவார். வெள்ளிநிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு என்ற வரிகளை கேட்ட கண்ணதாசன், நேராக வாலி தங்கியிருந்த சின்னஞ்சிறு அறையை தேடிச்சென்று தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பரிசளித்தார். கண்போன போக்கிலே பாடல் கண்ணதாசன் எழுதியதாக பலரும் எண்ண, தனக்கு கிடைத்த பாராட்டு அதுதான் என்கிறார்.. வாலி
வாலி பிரபலமடைந்த நிலையில் எந்தக் கட்சியிலும் சேராதே, சொந்தப்படம் தயாரிக்காதே, ஒன்றிருக்க மற்றொன்றை நாடாதே என்ற 3 அன்புக் கட்டளைகளை இட்டார் கண்ணதாசன்..
- ஜே.முஹமது அலி







