முக்கியச் செய்திகள் இந்தியா

மத்திய அரசின் கிரீன் பீல்டு விமான நிலையங்கள் என்றால் என்ன?

மத்திய அரசு சார்பில் பேசப்பட்டு வரும் கிரீன் பீல்டு விமான நிலையம் என்றால் என்ன அது எப்படி செயல்பட உள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

 

கிரீன் பீல்டு என்றால் பொதுவாக இயற்கை சூழல் அதிகமாக, பசுமையான கட்டமைப்பை கொண்டிருக்கும் வகையில் அமைந்திருக்கும். கிரீன் பீல்டு விமான நிலையம் என்பது இயற்கையான சூழலை தாண்டி தற்போதைய விமான நிலையங்களின் தரம் உயர்த்துதல் மட்டுமின்றி, புதிய வசதிகளை அதிகரித்தல், புதிய விமான தளம் அமைத்தல் போன்றவைகளையும் உள்ளடக்கியது. 2004 -05 ஆம் நிதியாண்டிலிருந்து மத்திய அரசால் கிரீன் பீல்டு விமான நிலையங்கள் பற்றி பேசப்பட்டு வருகிறது. முதன் முதலில் 2008 ஆம் ஆண்டு கிரீன் பீல்டு விமான நிலையம் குறித்த கொள்கை முடிவுகள் வரையறுக்கப்பட்டன. பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, அதிகரிக்கும் விமான போக்குவரத்து சேவையை உரிய நேரத்தில் வழங்க கிரீன் பீல்டு விமான நிலையம் பற்றி கொள்கைகள் வகுக்கப்பட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

தற்போது செயல்பாட்டிலுள்ள விமான நிலையங்களை தரம் உயர்த்தி மேம்படுத்த அரசின் பொதுத்துறை அல்லது தனியார் துறைகள் தனியாகவோ, அல்லது ஒன்று சேர்ந்தோ இந்திய விமான போக்குவரத்து இயக்கத்தின் அனுமதியோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, கிரீன் பீல்டு விமான நிலையம் பேசு பொருளாக மாறி வரும் நிலையில், ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் விமான நிலையத்தால் போக்குவரத்து இலக்குகளை செயல்படுத்தும் போது, கால தாமதம், சேவையின் தரத்தில் மாற்றம் போன்ற நடைமுறை சவால்கள் அதிகமாகும் போது, புதிதாக கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க அனுமதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

அதிக பரப்பளவு இடம் இருக்கும் பட்சத்தில், தற்போது இருக்கும் விமான நிலையங்களுக்கு இணையாகவோ அல்லது அருகிலோ கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்கப்படலாம். வேறு இடத்தில் அமைக்கப்படும் பட்சத்தில் 150 கிலோமீட்டர் தூரத்திற்குள் புதிய கிரீன் பீல்ட் விமான நிலையம் அனுமதிக்கப்படும். அதே நகரத்தின் இரண்டாவது விமான நிலையமாக செயல்பட அனுமதிக்கப்படும். கிரீன் பீல்ட் விமான நிலையத்தை அனுமதிக்கும் போது, ​​அது பொதுத்துறை அல்லது தனியார் துறைகளில் உள்ளதா அல்லது கூட்டு முயற்சியாக எடுக்கப்படுமா என்பதை அப்போதுதான் அரசு முடிவு செய்யும் என கூறப்படுகிறது.

 

ஒரு வேளை கிரீன் பீல்ட் விமான நிலையத்தை அமைக்க அரசாங்கம் முடிவெடுத்தால், அது பொருளாதார ரீதியாக லாபகரமானதாக இல்லாவிட்டாலும், ஆரம்ப மூலதனச் செலவு மற்றும் தொடர்ச்சியான இழப்புகள் ஆகிய இரண்டையும் ஈடுகட்ட இந்திய விமான நிலையங்கள் ஆனையத்திற்கு மானியத்தை இந்திய அரசு வழங்கும். விமான நிலைய மேம்பாடு தொழில்துறை மேம்பாட்டிற்கான முக்கிய உந்து சக்தியாக அமையும். மேலும் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்தில் செலவிடப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 350 ரூபாய் மதிப்பில் பலன்கள் கிடைக்கின்றன.


மேலும் விமானப் போக்குவரத்தின் மூலம்100 நேரடி வேலைவாய்ப்புகளும், ஒட்டுமொத்தமாக 610 வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அடுத்த 10 ஆண்டுகளில், சீனா மற்றும் அமெரிக்காவை, பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது பெரிய விமானப் பயணிகள் சந்தையாக இந்திய வான்வெளி மாறும் என்று கணித்துள்ளது சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA).

 

அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு, விமான நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 153 விமான நிலையங்கள் உள்ளன. விமான நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தரமான பயணிகள் போக்குவரத்தை வழங்குவதில் கவனம் செலுத்தி, புதிய வான்வளி பகுதிகளை இணைப்பதில், நாட்டில் கிரீன் பீல்டு விமான நிலையங்கள் முக்கிய பங்காற்றும் என நம்பப்படுகிறது.

 

அடுத்த 20 ஆண்டுகளில் நாட்டில் புதிதாக 500 விமான நிலையங்கள் அமைக்க உள்ளது. அதில் 75 சதவீதம் அதாவது 375 விமான நிலையங்கள் கிரீன் பீல்டு விமான நிலையங்களாக இருக்கும் என்பது மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் மதிப்பீடு. தற்போது இந்தியாவில் 21 கிரீன் பீல்ட் விமான நிலையங்களை அமைப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சிறிய நகரங்களில் புதிய விமான நிலையங்களின் பொருளாதார செயல்பாடு குறித்து இன்னும் சோதிக்கப்படவில்லை.

 

இந்த புதிய விமான நிலையங்களின் செயல்பாடு லாபத்தை நோக்கி செல்ல சில காலம் காத்திருக்க வேண்டி வரும் எனவும் கருதப்படுகிறது. கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க தேவையான நிலம் கையகப்படுத்துதல், நீர் மற்றும் மின்சாரம் வழங்குதல், அணுகு சாலைகள் அமைத்தல் போன்றவற்றில் மாநில அரசு தனது கருத்துக்களைச் சேர்த்து மத்திய அரசுக்கு முன்மொழிவை அனுப்பிய பிறகு அதனை மத்திய அரசு ஆராய்ந்து முடிவெடுக்கும்.

 

ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரதமர் மோடிக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில்

Arivazhagan Chinnasamy

பரிகார பூஜை செய்வதாகக் கூறி நகைகளை திருடிய நபர் கைது!

Jeba Arul Robinson

சோளம் திருடியதாகக் கூறி பட்டியலின இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்!

EZHILARASAN D