மின் தேவையை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை – உள்துறை அமைச்சர் ஆலோசனை

மின் தேவையை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.   நாடு முழுவதும் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வரும்…

மின் தேவையை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

 

நாடு முழுவதும் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் அவரது இல்லத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர் கே சிங் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடு முழுவதும் கையிருப்பில் உள்ள நிலக்கரி அளவு மற்றும் போதுமான நிலக்கரியை மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதேபோல் நிலக்கரி சுரங்கங்களிலிருந்து மாநிலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விரைந்து கொண்டு செல்வதற்கு சிறப்பு சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருவது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எடுத்துரைத்தார்.

 

மேலும், வரும் நாட்களில் நிலக்கரியை விரைந்து கொண்டு செல்வதற்கு போதுமான அளவு சரக்கு ரயிலை பயன்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தினார். இதேபோல் தற்போது இருக்கக்கூடிய மின் தட்டுப்பாட்டை போக்குவதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாடு முழுவதும் இருக்கக்கூடிய மின் தேவை மற்றும் மின் உற்பத்தி தொடர்பாக எடுத்துரைத்த மத்திய மின் துறை அமைச்சர் ஆர் கே சிங் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சார கொள்முதல் செய்வதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடுத்துரைத்தார்.

 

இதைப்போல் குறுகிய காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு பல்வேறு மாநிலங்களில் செயல்படாமல் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை துரிதமாக செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் மத்திய உள்துறை அமைச்சரிடம் விளக்கியுள்ளார். இந்த சந்திப்பை தொடர்ந்து மத்திய மின்சார துறை அமைச்சர் ஆர் கே சிங் தமிழ்நாடு குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநில மின்துறை மூத்த அதிகாரிகள் மற்றும் தனியார் மின் துறை நிறுவனங்களின் செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.