கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில், படப்பிடிப்பு தளங்களில் 100 சதவீதம் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய திரைப்படங்கள் எடுப்பது தொடர்பாக, ஆஸ்திரேலியா அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலோசனை கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேற்கு ஆஸ்திரேலியாவின் கலை மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் டேவிட் டெம்பிள் மேன் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் ரோஜர் குக் உடன் பங்கேற்றனர். தமிழ் திரைப்படத்துறை சார்பில், தயாரிப்பாளர் டி.ஜி தியாகராஜன், இயக்குநர் ஆர்.வி உதய்குமார், சிவா, தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தேனான்டாள் முரளி, நடிகை குட்டி பத்மினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டி.ஜி தியாகராஜன் பேசுகையில்,
தென்னிந்திய திரை உலகத்துடன் தொடர்பு கொண்டு இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உறவை வலுப்படுத்தவே ஆஸ்திரேலியாவின் கலாச்சார அமைச்சரும், துணை பிரதமரும் வந்துள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அவர்களுடன் விவாதித்து எந்த மாதிரியாக, ஆஸ்திரேலியாவில் தமிழ் திரைப்படங்களை எடுக்க உதவி செய்ய உள்ளார்கள் என்பது குறித்து விவாதிக்க உள்ளோம் என்றும், இது தொடர்பாக இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர்
ரோஜர் குக் பேசுகையில்,
ஆஸ்திரேலியா – இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து பயணிக்கும் போது கலாச்சார ரீதியாக, பொருளாதார ரீதியாக நன்மை ஏற்படும் என்றும், 100 கோடி ஆஸ்திரேலிய டாலர் மதிப்பில் திரைப்பட ஸ்டுடியோக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் இந்தியா – ஆஸ்திரேலியா இரு நாடுகளும் நல்ல திரைப்படங்களை கொடுக்க முடியும் என்று தெரிவித்தார். இன்றைய கூட்டத்தின் முக்கியத்துவம்
என்னவென்றால், ஆஸ்திரேலியாவில் இந்திய திரைப்படங்கள் எடுப்பதில் உள்ள சிக்கல்கள் தடைகள் என்னவென்பதை அறிந்து அதை நிவர்த்தி செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.
இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசுகையில்,
மேற்கு ஆஸ்திரேலியாவின் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இங்கு வந்துள்ளார்கள். அங்கு தமிழ், இந்திய திரைப்படங்கள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் நாங்கள் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அங்கு இந்திய படங்களுக்கு படப்பிடிப்பு நடத்த 30 முதல் 40 சதவீதம் வரை தயாரிப்பாளர்களுக்கு சலுகைகள் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பு நடத்த வசதியாக எந்தவித நிபந்தனைகளும் விதிக்க கூடாது எனவும் படக்குழுவினர் அனைவருக்கும் தடை
இல்லாமல் விசா வழங்கி இங்குள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாக கூறினார்.
வெளிமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துவதை தவிர்க்க பலரிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த நிலை தொடர்ந்தால் பெரிய நடிகர்கள், சிறிய நடிகர்கள் என பார்க்காமல் தொழிலாளர்கள் நலன் கருதி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இளையராஜாவிற்கு எம்.பி பதவி கொடுத்ததில் திரைத்துறையை சார்ந்தவராக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அதன் பின்புலத்தை ஆராய விரும்பவில்லை. கொரோனா தொற்று அதிகரித்து வரும் காலத்தில் படப்பிடிப்பில் கொரோனா கட்டுப்பாடுகளை 100 சதவீதம் கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
– தினேஷ் உதய்









