கீழடியில் தற்போது நடைபெற்று வரும் 7ஆம் கட்ட அகழாய்வில் இரண்டு உறைக்கிணறுகள் அழகிய வேலைப்பாட்டுடன் வெளிப்பட்டுள்ளன இன்று தமிழக தொல்லியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “அழகிய வேலைப்பாடுகளுடன் இருவரி கயிறு வடிவமைப்பு கொண்ட இரட்டை வடத்துடன் அலங்கரிக்கப்பட்ட உறைக்கிணறும் கண்டறியப்பட்டுள்ளது. 1.26 மீ. ஆழத்தில் சுடுமண் உறைக்கிணற்றின் மேல்பகுதி தென்பட்டது. அதன் விட்டம் 77 செ. மீ. அதன் பக்கவாட்டில் 44 செ. மீ. உயரம் கொண்டும் தடிமன் 3 செ. மீ. கொண்டும் வெளிப்புறத்தில் கயிறு வடிவ புடைப்பு வேலைப்பாட்டுடன், இருவரிகளில் அமைக்கப் பெற்றுள்ளது. இந்த சுடுமண் உறைக்கு கீழ் மற்றொரு சுடுமண் உறை உள்ளடங்கிய நிலையில் தோன்றியது, இந்த மேல் சுடுமண் உறையில் வெளிப்புறத்தில் கயிறு போன்ற அலங்கார வடிவமைப்பு இருப்பதால் சுடுமண் உறைக்கிணறாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.”
“அகழாய்வு மேற்கொண்ட பொழுது மேலும் இரண்டு உறைகள் வெளிப்படுத்தப்பட்டன. தற்போதைய உயரம் \84 செ.மீ. இவற்றில் இரண்டாம் உறை 19 செ.மீ. மற்றும் மூன்றாம் உறை 18 செ.மீ. உயரம் கொண்டதாக உள்ளது.இந்த உறைகள் ஒன்றோடு ஒன்று இணைத்த நிலையில் உள்ளன, இதனை தொடர்ந்து அகழாய்வு செய்வதன் மூலம் அடுத்த உறைகளை கண்டறிய முடியும். கீழடியில் மேலும் ஒரு உறைக் கிணறு 411 செ.மீ ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளது, உறைக்கிணற்றின் விளிம்புப் பகுதியில் அலங்கரிப்புடன் காணப்படுகிறது.”
“இந்த உறையின் விட்டம் கிழக்கு மேற்காக 58 செ.மீ. கொண்டுள்ளது, இதன் தெற்குப் பகுதி மண்ணடுக்கில் புதைந்துள்ளது. இதன் தடிமன் 3 செ.மீ. கொண்டதாகும்.” என கீழடி அகழாய்வு இயக்குநர் சிவானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







