கிருஷ்ணகிரி அருகே மகளின் திருமண அழைப்பிதழை திருக்குறள் புத்தகத்துடன் இணைத்து அச்சிட்டு பெண்ணின் தந்தை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் முனிரத்தினம். பட்டாசு கடை நடத்தி வரும் இவர் அடுத்த மாதம் தனது மகளுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு உள்ளர். மகளின் திருமணத்திற்காக அழைப்பிதழ் அச்சடிக்க திட்டமிட்ட அவர், திருமண அழைப்பிதழ் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக திருமண அழைப்பிதழை திருக்குறள் புத்தகத்துடன் இணைத்து அச்சடித்து உள்ளார்.
திருக்குறள் புத்தகத்தின் முதல் பக்கத்திலும், கடைசி பக்கத்திலும் திருமண அழைப்பிதழை அச்சடித்து உள்ளார். மேலும் 1330 குரள்களும் விளக்கத்துடன் உள்ளவாறு அச்சடித்து உள்ள அவர் தன்னால் முடிந்தவரை அனைவரின் இல்லங்களிலும் திருக்குறளை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அழைப்பிதழை இவ்வாறு அச்சடித்துள்ளதாக தெரிவித்தார்.
திருமண அழைப்பிதழை பார்ப்பவர்கள் திருக்குறளையும் வாசிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்த முனிரத்தினம், தனது மகளின் திருமணத்தில் தாம்பூல பைக்கு பதிலாக மரக்கன்றுகள் வழங்க உள்ளதாகவும் கூறினார்.








