குளிர்கால கூட்டத்தொடரில் தமிழகம் தழுவிய பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசவிருக்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் 273ம் ஆண்டு திப்பு ஜெயந்தியை முன்னிட்டு, திப்பு சுல்தான் மாநில பேரவை சார்பில் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “டிசம்பர் 6ம் தேதியிலிருந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் தமிழகம் தழுவிய பல்வேறு பிரச்னைகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேசவிருக்கிறோம். நீட் விலக்கு மசோதா மற்றும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யக்கூடிய மசோதா ஆகியவற்றிற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநர் தமிழக அரசுக்கு எதிரான ஒரு அரசியலை செய்து கொண்டிருக்கிறார். அவர் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஒருவர் என்பதை முற்றிலும் மறந்துவிட்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டரைப் போல 24 மணி நேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவரை தமிழ்நாட்டில் இருந்து திரும்ப பெற வேண்டும்.
வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்து, வேலை தேடி தமிழ்நாட்டுக்கு இளைஞர்கள் வருவது கவலைப்படக்கூடிய ஒன்றுதான். இருப்பினும் இது அச்சத்தை தரக்கூடியதாக உள்ளது. அவர்கள் வேலைவாய்ப்பு தேடி வருகிறார்கள் என்கிற கோணத்தில் அதை நாம் மனிதாபிமான அடிப்படையிலே எதிர்க்க முடியாது. ஆனால் உள் நோக்கத்தோடு அவர்கள் குடியேற்றம் செய்யப்படுகிறார்களோ என்கிற எண்ணமும் தோன்றுகிறது. மேலும் அவர்களுக்கு வாக்குரிமையும் அளிக்கப்படுகிறது. இது மாநிலத்தின் தனித்துவத்தை பாதிக்கப்பதோடு, பல்வேறு வகைகளில் இந்த மாநிலத்தைச் சார்ந்த மண்ணின் மைந்தர்களின் உரிமைகளையும் பாதிக்கச் செய்யும்.
ஆகவே, தமிழ்நாட்டை நோக்கி வட இந்திய மக்கள் ஏராளமானவர்கள் வந்து கொண்டிருக்கிற நிலையில், தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்தி, இது குறித்து உரிய வல்லுனர்களோடு கலந்தாய்வு செய்து, தமிழ்நாட்டினருக்கான வேலை வாய்ப்பு, கல்வி போன்றவற்றை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குஜராத் தேர்தலில் பிரச்சாரம் முடிந்துள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று தனது தாயை சந்திப்பதாக கூறி சென்றுள்ளார். இது கண்டனத்திற்குரியது. பிரச்சாரத்தின் போது சந்தித்திருக்கலாம் அல்லது வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு சந்தித்திருக்கலாம். அதை தவிர்த்து இன்று அவர் தாயை சந்திப்பது என்பது திட்டமிட்டது. உள்நோக்கத்துடன் பிரதமர் மோடி செயல்படுகிறார். இது கண்டனத்துக்குரியது. மேலும் குஜராத் தேர்தல் முடிவுகள் எந்த வகையிலும் தமிழ்நாடு அரசியலில் பிரதிபலிக்காது” என்று தெரிவித்தார்.