3 கட்ட போராட்டத்திற்கு பின்னும் கோரிக்கையை தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய ஓய்வூதியம் திட்டம் ரத்து, அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திமுக
அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திவரும் நிலையில் அடுத்தகட்ட போராட்ட
நடவடிக்கைகள் குறித்து மதுரையிலுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில்
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில உயர்மட்டக்குழு கூட்டம்
நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த
நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து ஜாக்டோ ஜியோவின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு குறித்து மாநில
ஒருங்கிணைப்பாளர்கள் மு.அன்பரசு, பொன்.செல்வராஜ், மயில் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்-12ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்ட ஆயத்த மாநாடு, மார்ச் -5ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம் எனவும் தெரிவித்தனர்.
மேலும், மார்ச்-24 வட்டார, மாவட்ட தலைநகரங்களில் 20ஆயிரம் கிலோமீட்டர் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இந்த 3 கட்ட போராட்டத்திற்குப் பின்னும் கோரிக்கையைத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றனர்.
அத்துடன், அதிகார வர்க்கத்துக்கும், ஆட்சியாளருக்கும் இடையே இடைவெளி உள்ளது.
அதிகாரத்தில் உள்ளவர்கள் எங்களது உரிமையைப் பறித்து வருகிறார்கள். தற்போதைய
திமுக ஆட்சி இரட்டை தன்மை ஆட்சியாக இருக்கிறது, தமிழக நிதித்துறை கார்ப்பரேட்
சிந்தனையுடன் செயல்படுகிறது. எங்களது கோரிக்கைகள் தொடர்பான நிதியமைச்சக
கோப்புகளை நிதியமைச்சர் புறக்கணிக்கிறார். ஆட்சியாளர்களின் கார்ப்பரேட்
சிந்தனை கொள்கைக்கு எதிரான போராட்டத்தை நடத்தவுள்ளோம் என்றார்.
முதலமைச்சர் நிதியமைச்சர் அரசு ஊழியர்கள் குறித்துப் பேசமாட்டார் என்றார். ஆனால் தற்போது பேசாமலே நிதியமைச்சக பைல்களை தடுக்கிறார் நிதியமைச்சர். கருணாநிதி அறிவித்த அரசு ஊழியர்களுக்கான பஞ்சப்படியை சமூக அநீதி என்கிறார் நிதியமைச்சர். 20மாதம் பொறுத்துவிட்டோம் அடுத்த போராட்டங்களை முன்னெடுப்போம் என்றனர்.







