“2026-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கு இப்போதிருந்தே ஆயத்தமாக வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் வரும் 15-ந் தேதி திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ள நிலையில், தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“கோவை குலுங்கட்டும்! கொள்கைத் தீரர்களே திரண்டிடுக!!
இது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமான விழாவோ; அதன் தோழமைக் கட்சிகளுக்கான விழாவோ மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களின் விழா! அவர்கள் நமக்கு வழங்கியுள்ள மகத்தான வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா! மதவாத அரசியலுக்குக் கடிவாளம் போட்டு ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாத்து, நாட்டை வழிநடத்தும் வகையில் நாற்பதுக்கு நாற்பதை நமக்கு வழங்கியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
அந்த வெற்றியையும், அத்தகைய வெற்றிப்பாதையில் பயணிக்க எந்நாளும் நம்மை இயக்குகின்ற ஆற்றலாக விளங்கும், உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையும், 40/40 என்கிற மகத்தான வெற்றிக்கூட்டணிக்குத் தலைமையேற்கும் பொறுப்பேற்ற உங்களில் ஒருவனான எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும் கோவையில் முப்பெரும் விழா நடைபெறும் என ஜூன் 8-ஆம் நாள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஜூன் 15 அன்று கோவையில் முப்பெரும் விழா நடைபெறும் என அறிவித்திருக்கிறார். கட்டளை கேட்டதும் பாய்கின்ற கணை போல, அறிவிப்பு வெளியானதுமே கட்சி நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டார்கள்.
கருணாநிதியின் நூற்றாண்டில் அவரது நினைவாகப் பயனுள்ள திட்டங்கள், அவரது பெயரிலான பயன்மிகு கட்டடங்கள் அமைக்கப்பட்டாலும் அவரது தொண்டர்களாகிய நாம் அவருக்குச் செலுத்தக்கூடிய காணிக்கை என்பது, நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி என்பதைத் தொடர்ந்து நான் வலியுறுத்தி வந்தேன். கட்சியின் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் ஒவ்வொரு நாளும் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளைக் கவனித்து வந்தேன்.
உங்களுடைய பணிகள் என் எண்ணத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் இருந்தன. எங்கேனும் சில இடங்களில் சற்று சுணக்கமோ, சோர்வோ தெரிந்தாலும் உடனடியாக அதனைக் கவனிக்கின்ற இடத்தில் நானும், விரைவாக அதனை சரிசெய்து வெற்றியை உறுதிசெய்கிற பணியில் நீங்களும் இருந்ததால் தான் இந்த மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். அதனை நம் உயிர்நிகர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு காணிக்கையாக்கியிருக்கிறோம்.
தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் அண்ணா அறிவாலயத்தில் ஊடகத்தினருடனான சந்திப்பின் போது அவர்கள் என்னிடம், “நாற்பதுக்கு நாற்பது என்ற முழுமையான வெற்றியை நாங்களே எதிர்பார்க்கவில்லை” என்றனர். “நான் எதிர்பார்த்திருந்தேன்” என்று அவர்களிடம் தெரிவித்தேன். உறுதியாக நான் எதிர்பார்த்ததற்குக் காரணம், கருணாநிதியின் தொண்டர்களான நீங்கள் நிச்சயம் இந்த முழுமையான வெற்றியைப் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையினால் தான். அதற்கேற்ற உழைப்பை வழங்கிய தொண்டர்கள் ஒவ்வொருவருக்குமான பாராட்டை உங்களில் ஒருவன் என்ற முறையில் நான் ஏற்றுக்கொள்ளும் விழாதான் கோவை முப்பெரும்விழா. இது கட்சியின் உடன்பிறப்புகளின் உழைப்பைப் பாராட்டுகின்ற விழா.
மத்திய அரசில் பங்கேற்கும் வாய்ப்பில்லாத போது நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியால் தமிழ்நாட்டிற்கு என்ன இலாபம் என்று நமக்கு எதிர்முகாமில் இருக்கும் சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன். அது கேள்வி அல்ல, அ வர்களின் தோல்விப் புலம்பல். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அறிந்தவர்களுக்கும் நன்கு தெரியும், தமிழ்நாட்டின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பரவலான வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம்.
கழக மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், வெற்றி விழாக்கள் எதுவாக இருந்தாலும் அது வெறும் கூடிக் கலைவதற்கான நிகழ்வல்ல. ஒவ்வொரு நிகழ்வும் தொண்டர்களுக்கான பயிற்சி அரங்கம். அடுத்த களத்திற்கான ஆயத்தப் பணி. கோவை முப்பெரும் விழாவைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம். அங்கும் நம் தொடர் வெற்றியினை உறுதி செய்தாக வேண்டும். அதனைத் தொடர்ந்து, ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கும் நாம் இப்போதே ஆயத்தமாக வேண்டும்.






