மணிப்பூர் விவகாரம் அதிர்ச்சி அளிக்கிறது. மனிதாபிமானமுள்ள சமுதாயமாக நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது.
இந்நிலையில், குகி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், பல்வேறு தரப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மணிப்பூரில் வன்முறை தொடங்கிய நேரத்தில், கடந்த மே 4-ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மணிப்பூர் வீடியோவை கண்டித்து, குறிப்பாக இரு பெண்களுக்கு நடைபெற்ற பாலியல் வன்முறையைக் கண்டித்து டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மகளிர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மணிப்பூர் விவகாரம் முற்றிலும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.
மனிதாபிமானமுள்ள சமுதாயமாக நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். நாம் அனைவரும் அரசியல் பழியை ஒதுக்கி வைத்துவிட்டு இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை கூட்டாக எதிர்த்து போராட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.







